தமிழகம் முழுவதும், மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான 7 அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், துணை ஆட்சியர் நிலையிலான 6 பேருக்கு, மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு வழங்கியும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய முதன்மை வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல அலுவலர் நிலை- 4 பணியிடத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த பரமேஷ்வரி, தற்போதுவரை வெங்கடேஷ் பணியாற்றி வந்த பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள சுற்றுவட்ட மோதிரச்சாலை அமலாக்கத் திட்டப்பிரிவு சிறப்பு வருவாய் அலுவலர் ராமபிரதீபன், சென்னை பெருநகர மாநகராட்சி வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் ஆவின் பால் பண்ணை பொது மேலாளர் விஜய் பாபு, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளராக இருந்த ராஜசேகரன், சென்னையில் உள்ள சிப்காட் பொது மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது, புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடமாகும்.
திருவாரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 67 நில எடுப்புப்பிரிவு, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த மணிமேகலை, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டு உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநரான மங்களம், சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கு முன் இங்கு பணியாற்றி வந்த தேன்மொழி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி உயர்வு பெற்றவர்கள் பட்டியல்:
தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர்கள் நிலையிலான 6 அதிகாரிகள் மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்த்தப்பட்டு, தர்மபுரி மாவட்ட சிப்காட்டில் அமையுள்ள புதிய தொழிற்பூங்கா திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ) ஆக பணியமர்த்தப்பட்டு உள்ளார். இதற்குமுன், இப்பணியிடத்தில் இருந்த அழகிரிசாமி ஓய்வு பெற்று விட்டார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி டி.ஆர்.ஓ. ஆக பதவி உயர்வு பெற்று, திருவாரூர் மாவட்ட என்.ஹெச்.67 பிரிவுக்கு சிறப்பு அலுவலராக அமர்த்தப்பட்டு உள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மருத்துவர் செல்வசுரபி, மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார் டி.ஆர்.ஓ. ஆக பதவி உயர்வு பெற்று, சேலம் மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட முத்திரைத்தாள் பிரிவு சிறப்பு துணை ஆட்சியராகப் பணியாற்றி வந்த நர்மதா தேவி, சேலம் ஆவின் பால் பண்ணை பொது மேலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்கக நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த விஜயகுமாரி, பதவி உயர்வு பெற்று, சென்னை சுற்றுவட்ட மோதிரச்சாலைத் திட்ட அமலாக்கப்பிரிவு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ.) ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.