Skip to main content

தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி; அதிகாலையில் நிகழ்ந்த விபத்து

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Overturned truck on tracks; An early morning accident

கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரி தமிழக எல்லையான கோட்டைவாசல்  பகுதியில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கேரளாவில் இருந்து பிளைவுட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது மலை பாதையில் சென்று கொண்டிருந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரி செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்தில் கேரளாவின் ஆற்றுக்கரை பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகள் இல்லாத சிறப்பு ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. விபத்தை அறிந்தவர்கள் இரவு நேரத்தில் டார்ச் லைட் காட்டி ரயிலை நிறுத்தியுள்ளார்கள்.

அந்தப் பகுதியில் அதிகாலையில் அதிகமான ரயில் போக்குவரத்துகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலானது செங்கோட்டையிலிருந்து 4 மணிக்கு புறப்படும். அந்த ரயில் இந்த விபத்து காரணமாக அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது ரயில் போக்குவரத்து அந்த பகுதியில் சீரானது. இருப்பினும் மூன்று மணி நேரம் தாமதமாக எழும்பூர்-கொல்லம் ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

சார்ந்த செய்திகள்