Skip to main content

தற்காலிக சபாநாயகராக கு. பிச்சாண்டி பதவியேற்பு!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

tamilnadu assembly Temporary speaker take swearing governor


தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு. பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார். சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (10/05/2021) காலை 11.00 மணிக்கு எளிமையாக நடந்த பதவியேற்பு விழாவில், கு. பிச்சாண்டிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

 

பின்னர், தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டிக்கு ஆளுநர் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்காலிக சபாநாயகருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (11/05/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் நடக்கிறது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நாளை மறுநாள் (12/05/2021) நடக்கிறது.

 

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கு. பிச்சாண்டி 9 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்