Skip to main content

தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

Tamil Nadu Disaster Risk Reduction Agency; Warning to the public

 

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

இது குறித்து தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வட தமிழ்நாட்டின் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 17.03.2023 முதல் 19.03.2023 வரை தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

பொதுமக்கள் மின்னல் தாக்கத்தின் போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோகக் கட்டமைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது. நீச்சல் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

 

திறந்த வெளியில் இருக்க நேரிட்டால் இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, குதி கால்களை ஒன்று சேர்த்து தலை குனிந்து, தரையில் பதுங்குவது போல அமர்ந்து கொள்ள வேண்டும். தரையை ஒட்டி அமர்வதால். மின்னலின் தாக்கம் குறைவாக இருக்கும். தரையில் சமமாகப் படுக்கக் கூடாது. எனவே, இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்