
'தமிழ்நாடு நாள் இன்று' கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக விழாக்கோலம் பூண்டுள்ளது சென்னை. 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது. அப்பொழுது சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என சூட்டக்கோரி தியாகி சங்கரலிங்கனார் தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்தார். மாபோசி, ஜீவா உள்ளிட்ட ஏராளமானோர் தமிழ்நாடு கோரிக்கைக்காக குரல் கொடுத்தனர்.

பலவித போராட்டங்களுக்குப் பின், அண்ணா முதல்வரான பிறகு 1967 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்தார். தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 தேதியே 'தமிழ்நாடு தினம்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் நவம்பர் ஒன்றுதான் தமிழ்நாடு நாள் என சில அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்திருந்தன. முதல்வர் அறிவிப்பின் படி ஜூலை 18 இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 9 மணி அளவில் விழா தொடங்க இருக்கிறது.

தற்பொழுது காவேரி மருத்துவமனையில் கரோனாவிற்காக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதால் காணொளி வாயிலாக விழாவில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாளுக்காக கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறையின் சார்பாக கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகலை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற அரிய பொக்கிஷமான தொல்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாள் சென்னையில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, வள்ளுவர் கோட்டம், கலைவாணர் அரங்கம், எழிலகம், அண்ணன் நூற்றாண்டு நூலகம், காந்தி மண்டபம் என அரசு கட்டிடங்கள் வண்ணமயமாக மின்னொளியால் சோடிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லமும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.