Skip to main content

“ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது” - அன்புமணி

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

"Supreme Court's decision to pass Jallikattu Act is historic" - Anbumani

 

“தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்ட நிலையில், விலங்குகள் நல அமைப்பு என்ற போர்வையில் செயல்படும் எந்த அமைப்பும் இனி இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; “தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம்  தடை விதித்ததை தொடர்ந்து அப்போட்டிகளுக்கு அனுமதி அளித்து கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும்; தமிழ்நாடு அரசின் இந்த கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று நீதியரசர் கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு பல்வேறு வகைகளில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

 

ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழ்நாட்டு இளைஞர்களின் வீர விளையாட்டு என்பதைக் கடந்து தமிழ்நாட்டு உள்ளூர் இன காளைகளின் நலனையும், மரபு வழியையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்தது என்ற தமிழ்நாட்டு அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளின் பண்பாட்டுச் சிறப்பு என்பது நூற்றாண்டுகளைக் கடந்தது என்ற நிலையில் அது குறித்து ஆய்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் சரியான அமைப்பு இல்லை என்றும் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை எடுத்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளின் பண்பாட்டு சிறப்பு குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்ட நிலையில், விலங்குகள் நல அமைப்பு என்ற போர்வையில் செயல்படும் எந்த அமைப்பும் இனி இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது.

 

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னொரு அம்சம் ஜல்லிக்கட்டு போட்டிகள் போன்ற பொதுப்பட்டியலில் உள்ள பொருட்கள் குறித்து சட்டம் இயற்றுவதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை உள்ளிட்ட அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் அதிகாரம் உண்டு என்பதாகும். இதன் மூலம் மத்தியப் பட்டியலில் உள்ள பொருட்கள் தவிர்த்து மீதம் உள்ள அனைத்து பொருட்கள் குறித்தும் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு எவ்வாறு அதிகாரம் உண்டோ அதேபோல் நீட் விலக்கு குறித்து சட்டம் இயற்றவும் தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டின் பண்பாட்டுடன் தொடர்புடையது என்ற அடிப்படையில் தான் அதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதேபோல் நுழைவுத் தேர்வுகளிலிருந்து தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் தொழில் படிப்பு கல்வி நிறுவனங்களுக்கு காலம் காலமாக விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அதைப் பாதுகாக்கும் நோக்குடன் தான் நீட் விலக்கு சட்டம் இயற்றப்பட்டது என்பதால் அதற்கு குடியரசு தலைவர் வழியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.