Skip to main content

“இது தமிழக சுகாதாரத்துறைக்கு கிடைத்த வெற்றியாகும்... இதற்காக ஐ.சி.எம்.ஆர் பாராட்டியுள்ளது”-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021
"This is a success for the Tamil Nadu Health Department ... ICMR has praised for this" - Interview with Minister Ma Subramanian

 

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக குழந்தைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டை சுகாதாரதுறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தும் குழந்தைகளுக்கான புதிதாக  வாங்கப்பட்ட இன்குபேட்டர்களை பார்வையிட்டும், திருநங்கைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார். அதன்பின் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்  போது, “கரோனா மூன்றாவது அலை வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான 100 படுக்கைகள் கொண்ட கரோனா வார்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். இதில் 30 வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகளும் 70 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயாராக உள்ளது. தமிழகத்தில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த 40 மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அப்பொழுது 6 லட்சம் டோஸ் வரை வீணடிக்கபட்டது.

 

"This is a success for the Tamil Nadu Health Department ... ICMR has praised for this" - Interview with Minister Ma Subramanian

 

தற்பொழுது தமிழகத்திற்கு ஒரு கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 550 டோஸ்கள் வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 159 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருந்து குப்பியில் 16 முதல் 24 சதவீதம் வரை கூடுதலாக மருந்து இருக்கும். இதனை வீணாகாமல் முறையாக பயன்படுத்தி ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 நபர்கள் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தமிழக சுகாதாரதுறைக்கு  கிடைத்த வெற்றியாகும். மத்திய ஐ.சி.எம்.ஆர் தமிழக சுகாதாரத் துறையை பாராட்டியுள்ளது. இந்த மாதத்திற்கான மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 71 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டும். ஆனால் இதுவரை 10 லட்சம் வரை மருந்துகள் வந்துள்ளது.

 

நாளை அல்லது நாளை மறுநாள் 11 லட்சம் மருந்துகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத்துறையில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் என 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அல்லது பணி காலத்தை நீட்டிக்க வேண்டும் என போகிற இடமெல்லாம் மனுக்கள் வருகின்றது. இதுதொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசி துறைவாரியாக நல்லது செய்யப்படும். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது மருத்துவர்கள்  பணியில் இல்லாமல் தனது சொந்த கிளினிக்கில் பணி செய்து வருவதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நத்தம் பகுதியில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இதில் கூட்டுறவுத் தறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாவட்ட கலெக்டர் விசாகன் உள்பட அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்