
“சமஸ்கிருதம் தான் கிட்டதட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் தாய்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் சமஸ்கிருத பயிற்சி வகுப்புகள் தொடர்பான விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “சமஸ்கிருதம் எந்த மொழிக்கும் எதிரானது கிடையாது. யாரையும் அவர்களின் தாய்மொழியிலிருந்து விலக்கி வைக்க முடியாது. சமஸ்கிருதம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளின் தாய். எனவே, சமஸ்கிருதத்தை மேம்படுத்துவது அதன் மறுமலர்ச்சி சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் விரைவுபடுத்துவதாகும்.
சமஸ்கிருதம் உலகின் மிகவும் அறிவியல் பூர்வமான மொழி மட்டுமல்ல, இணையற்ற இலக்கண அமைப்பையும் கொண்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில், சமஸ்கிருதத்தின் மறுமலர்ச்சிக்கு நாடு முழுவதும் சாதகமான சூழல் உருவாகி உள்ளது” என்றார். இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், “செந்தமிழ் செய்துமுடிக்கும். சமஸ்கிருதம் கிட்டதட்ட அனைத்து இந்திய மொழிகளின் தாய்” என்று கூறியுள்ளார் அமித்ஷா. இதுவரை “சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய்” என்று மட்டுமே கூறிவந்த இந்துத்துவா கூட்டம் இப்பொழுது “கிட்டதட்ட” என்று இறங்கியுள்ளனர். இன்னும் அவர்களுக்கு உரிய இடம் வரை கீழிறக்கும் பணியை செந்தமிழ் செய்துமுடிக்கும்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.