புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள உப்பிலியக்குடி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10 ம் வகுப்பு மாணவர்கள் 75 பேர் உள்பட சுமார் 316 மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இந்த உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் படிப்புக்காக சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரனூர் மற்றும் புத்தாம்பூருக்கு செல்ல வேண்டியதில்லை. அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று கடந்த 4 ஆண்ண்டுகளுக்கு முன்பு தமிழக அரசிடம் வைப்புத் தொகை ரூ. 2.20 லட்சத்துடன் விண்ணப்பித்தனர்.
மேலும், பள்ளி நேரத்துக்கு கீரனூர் செல்ல ஒரு பேருந்து மட்டுமே உள்ளதாலும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாலும் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது.
பல வருடங்களாக காத்திருந்த மக்களிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவுக்கு வந்த கந்தர்வகோட்டை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுமுகம்.. இந்த கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று உறுதியாக கூறினார். ஆனால் இந்த கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலில் உப்பிலியக்குடி பள்ளியின் பெயர் இல்லை.
பள்ளி உயர்த்தப்படாததால் கிராம மக்கள் ஆகஸ்ட் 10 ம் தேதியில் இருந்து பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளி முன்பு பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பிறகு அங்கு வந்த சில அதிகாரிகள் சமாதானம் செய்தும் பயனில்லை. தொடரிந்து மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் 316 மாணவர்களில் வெளியூர் மாணவர்கள் 15 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 301 மாணவ, மாணவிகள் சுதந்திரதினத்தையும் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பள்ளியில் கடந்த ஆண்டு வரை சுதந்திர தினத்தில் கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை, விளையாட்டு போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மாலை வரை நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசும் பாராட்டும் வழங்கி சிறப்பித்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு எந்த நிகழ்வும் இல்லை. அதனால் சுதந்திரதின விழா, உற்சாகமின்றி 10 நிமிடங்களில் முடிவடைந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும், பள்ளி முன்பு திரண்ட கிராம பொது மக்கள் பள்ளியை உடனே தரம் உயர்த்த வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத பல பெற்றோர்கள் கூறும் போது.. உப்பிலியக்குடி மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகிறார்கள். இங்கு 10 ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு 10 கி.மீ தூரத்தில் உள்ள கீரனூர் போகனும். அதற்கும் ஒரு பேருந்து தான் உள்ளது. அந்த பேருந்தும் பல நாட்கள் தாமதமாக வரும் அல்லது வராமலும் நின்றுவிடும். அதனால் மாணவர்களை ஏதாவது பைக்குகளில் ஏற்றிச் செல்ல வேண்டும். தேர்வு நேரங்களில் மிகவும் சிரமம்.
பொது தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளுக்கு போகவும சிரமமாக உள்ளது. அதனால் தான் எங்கள் ஊருக்கே மேல்நிலைப் பள்ளியை கொடுங்கள் என்று கேட்டு வைப்புத் தொகையும் கட்டி 4 வருசமாச்சு. தரம் உயர்த்தல. எம்.எல்.ஏ ஆறுமுகம் கூட ஓட்டுப் போட்ட எங்களை ஏமாற்றிவிட்டார். அதனால தான் 4 தொடக்கப்பள்ளி ஒரு உயர்நிலைப் பள்ளி என்று அனைத்து பள்ளிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்தோம். இன்று சுதந்திர தினத்தையும் புறக்கணித்தோம். எதற்கு நல்ல தீர்வு கிடைக்கவில்லை. பள்ளி தரம் உயர்த்தும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்றனர்.