Skip to main content

‘மாணவர்களை இளம் வயதிலே நல்வழிப்படுத்த வேண்டும்’ ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய ஐ.ஜி. பாலகிருஷ்ணன்

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

‘Students should be disciplined at a young age’ IG. Balakrishnan advised teachers

 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் உட்கோட்ட அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர். அதன் தொடர்ச்சியாக முத்துப்பேட்டையில் செயல்பட்டு வரும் காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

 

முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால கனவுகள் மற்றும் லட்சியங்கள் குறித்து கேட்டறிந்தும், அவற்றை நினைவாக்க எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் அறிவுரை வழங்கினார். ஆசிரியர்களை சந்தித்து மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், அவர்கள் லட்சியங்களை நோக்கி பயணிக்கவும் தேவையான ஊக்குவிப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டதுடன், மாணவர்களை இளம் வயதிலே நல்வழிப்படுத்தி சமுதாயத்தில் அவர்கள் மிகச்சிறந்த குடிமக்களாக வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கையையும் தொடர்ந்து எடுக்குமாறு வலியுறுத்தினார். 


முத்துப்பேட்டை புதுத்தெரு பகுதியில் செயல்படுத்தியுள்ள E-BEAT செயலி, ரோந்து பணி ஆகியவற்றை தணிக்கைச் செய்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் காவல்துறையால் துவங்கப்பட்டுள்ள நூலகத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்ததுடன், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அதனை மேலும் சீரிய முறையில் பயன்படுத்தும் வகையில் அதிக அளவில் புத்தகங்கள் இடம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.


கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த மனநலம் பதிக்கப்பட்ட வாசுதுபாஜி (வயது 50) என்பவர் நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் அவர் வேதாரண்யம் பகுதியில் இருப்பதாக வாட்ஸ்சப் மூலம் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் காவல்துறையினர் வேதாரண்யம் சென்று அவரை அழைத்து வந்தனர். பின்னர் அவரை மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ஆகியோர்களின் தலைமையில் நேற்று அவரது குடும்பத்தினரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.  

 


 

சார்ந்த செய்திகள்