Skip to main content

“இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சி” அமித்ஷாவின் பரிந்துரைகளுக்கு தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

Strong opposition to Amit Shah's proposals to “Indianize India”.

 

ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

 

1976ம் ஆண்டு அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு முதல் முறையாக அலுவல் பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.  மக்களவை உறுப்பினர்கள் 20 பேர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேர் என 30 பேர் இக்குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். 

 

தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இக்குழு செயல்படுகிறது. கடந்த மாதம் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இக்குழு அதன் 11ஆவது அறிக்கையை சமர்ப்பித்தது. 112 பரிந்துரைகளை அந்த அறிக்கை கொண்டிருந்தது.

 

அனைத்து மத்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கை கூறியது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்” என்று காட்டமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற ஆர்எஸ்எஸ் கருத்தாக்கத்தில் இருந்து உருவான இந்த முயற்சிகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நமது நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மைக்கு எதிரானது” என தெரிவித்துள்ளது. 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒன்றிய கல்வி நிறுவனங்கள், பணித் தேர்வுகள், ஐ.நா பயன்பாடு எல்லாவற்றிலும் இனி இந்தி வழி. அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற ஆட்சிமொழிக்குழு பரிந்துரை. இது இந்திய மொழிகளின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அப்பட்டமான தாக்குதல். இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சி. இதை ஒரு போதும் ஏற்கமாட்டோம்” என கூறியுள்ளார். 

 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கல்வி நிலையங்களில் இந்தியை கட்டாயமாக்க முயல்வது நேருவின் வாக்குறுதியை மீறும் செயல்” என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்