Skip to main content

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
Special staff



மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பிற பணியாளர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பணி நிலைப்பு, சமூகப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் உள்ளடக்கிய கல்வித்திட்டத்தில் பணியாற்றிவரும் சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்கு கூட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முன்வராதது வருத்தமளிக்கிறது.

 

தமிழ்நாட்டில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது மிகவும் கடினமான விஷயமாகும்.  இதைக் கருத்தில் கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி, இயன்முறைப் பயிற்சி,  ஆலோசனை மற்றும் வழிகாட்டல் வழங்க சிறப்புப் பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், பகல்நேர பாதுகாப்பு மைய பாதுகாவலர்கள், உதவியாளர்கள் ஆகியோர் கடந்த 1998-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். தொடக்கத்தில் மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தின் அங்கமாக நியமிக்கப்பட்ட இவர்கள், பின்னர் 2002-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு மாற்றப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பணியாற்றி வரும் போதிலும் இவர்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
 

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவை செய்வது எளிதான விஷயமல்ல. கூடுதல் கவனமும், சகிப்புத் தன்மையும் அவசியமாகும். மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்புப் பணியாளர்கள் அனைவரும் மாற்றுத்திறன் குழந்தைகளை தங்களின் சொந்தங்களாகவே கருதி கவனித்து வருகின்றனர். இவர்களின் சேவையால் ஆண்டு தோறும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் சிறப்பான முறையில் கல்வி பெறுகின்றனர். ஆனால், அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணமான சிறப்புப் பணியாளர்களுக்கு ஊதியம், சமூகப்பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் அனைத்துமே மோசமாக உள்ளன.
 

உள்ளடக்கிய கல்வித்திட்ட சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு முதலில் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 2012-ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு தொகுப்பூதியம் நிறுத்தப்பட்டு, பணிக்கட்டணம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இவர்கள் பணியாற்றும் இடங்களில் இவர்களுக்கு தனியாக இருக்கைகள் கூட வழங்கப்படுவதில்லை. வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சமூகப்பாதுகாப்பு அம்சங்கள் கூட கிடையாது.


 

Special staff


பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளடக்கிய கல்வித்திட்ட சிறப்பு பயிற்றுனர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் கோரிக்கைகளை குழு அமைத்து பரிசீலிப்பதாக உறுதியளித்த தமிழக அரசு அதை நிறைவேற்றவில்லை. அதன் தொடர்ச்சியாகவே அவர்கள் கடைசி வாய்ப்பாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் நேற்று முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு பதிலாக போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
 

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுனர்களும், பிற பணியாளர்களும் ஆற்றும் பணி  போற்றத்தக்கது.  அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவையை பாராட்டி அங்கீகரிக்க வேண்டியது  அரசின் கடமை ஆகும். ஆனால், அவர்களுக்கு கவுரமான ஊதியமும், உரிமைகளும் கூட வழங்க தமிழக அரசு மறுத்து வருவது வேதனை அளிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு ஒருங்கிணைந்த  பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பிற பணியாளர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும். பணி நிலைப்பு, சமூகப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்; அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்