Skip to main content

தோப்பில் வேலை பார்த்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு- கடன் ரத்து செய்த இளம்பகவத்

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமம், முத்து மாரியம்மன் கோவில் தெரு இருளர் காலனியைச் சேர்ந்தவர்கள் சண்முகம் - அங்கம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் பாளையம். 

 

 

இவர்கள் உளியம்பாக்கம் அடுத்த காரப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள சவுக்கு தோப்பு ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக இராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 24ந்தேதி காலை அந்த கிராமத்துக்கு நேரடியாக அதிகாரிகளுடன் சென்றார். சம்மந்தப்பட்ட சவுக்கு தோப்பில் சென்று ஆய்வு செய்தபோது, சண்முகம் - அங்கம்மாள் குடும்பம் அங்கு வசிப்பது தெரியவந்தது. 

 

slave worker

 

அவர்களிடம், இது யார் நிலம், நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் என விசாரித்தவரிடம், இந்த நிலத்தின் உரிமையாளர் ஜெயலலிதா என்பவரிடம் 100000 ரூபாய் கடன் வாங்கினோம். கடனுக்காக எங்களை அழைத்து வந்து அவர்கள் நிலத்தில் வேலை வாங்கிக்கொண்டு உள்ளார்கள். நாங்கள் பதினோரு ஆண்டுகளாக இங்கு வேலை பார்த்து வருகிறோம் என்றனர். மேலும், கடன், வட்டியென ரூபாய் 2,70,000/- செலுத்தினால் தான் தங்களை வீட்டுக்கு அனுப்புவோம் எனச்சொல்லியுள்ளார்கள் என்றனர். 

 

slave worker

 

இவர்களை வேலை வாங்கியதோடு, முழுமையாக ஊதியம் தராமல் பெற்ற கடனுக்கான வட்டியென பணத்தை பிடித்துக்கொண்டு சொற்ப ஊதியம் தந்து வேலை வாங்கியதும், ஒரு நபருக்கான குறைந்தபட்ச கூலிக்கும் குறைவாக ஊதியம் அளித்து வந்ததும் தெரியவந்தது. அதோடு, அவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பாமல் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியது தெரியவந்தது. 

 

 

இதற்கான விசாரணை முடிவில் இராணிப்பேட்டை சார் ஆட்சியர் மேற்கண்ட குடும்பத்தினர் கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்டு அவர்களது கடன் தொகையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளார். அதோடு, கொத்தடிமைகளுக்கான அரசு நஷ்டயீடு தந்து அவர்களது வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். 

 

கொத்தடியைமாக வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றார் என்கிறார்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில்.

 

 

 

சார்ந்த செய்திகள்