ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாவது கட்ட தேர்தல் நிறைவுப் பெற்று, வாக்கு எண்ணிக்கைக்காக வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அரசு பாலிடெக்னிக் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு இருப்பதாகவும், வாக்குப்பெட்டிகளை மாற்ற முயற்சி நடந்திருப்பதாகவும் பரபரப்பு தொற்றியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை ஒன்றியத்தில் ஒரு மாவட்ட உறுப்பினர் பதவி, 11 ஒன்றிய உறுப்பினர் பதவி, 23 ஊராட்சி தலைவர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் திங்களன்று இரண்டாம் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பதிவான வாக்குகள் அனைத்தும், வாக்குப் பதிவு மையத்திலேயே சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதில் 10 வாக்குப் பெட்டிகளின் சாக்குப் பைகள் சந்தேகத்திற்கிடையேயான வகையில் பிரித்து இருந்தது. அங்கு பணியிலிருக்கும் சில காவல்துறையினர் மூலம் தகவல் வெளியே கசிந்தது. இதனால் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பெட்டிகளை மாற்றும் முயற்சியாகவும் இருக்கலாம். உடனடியாக மாநில தேர்தல் ஆணையமும் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் தலையிட்டு சாக்கோட்டை ஒன்றிய வாக்கு எண்ணும் பணியை நிறுத்த வேண்டும் உரிய விசாரணை செய்து தவறு நடந்து இருக்கும் பட்சத்தில் மறுவாக்கு பதிவு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வாக்கு எண்ணும் மையத்தினை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.