சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் படிக்கட்டில் நின்ற இளம்பெண் ஒருவர் தடுமாறி ரயில் தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திராவைச் சேர்ந்த காருண்யா என்ற பெண் ஒருவர் செங்கல்பட்டில் இருக்கக்கூடிய ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று உடன் பணியாற்றும் ஆண் நண்பர் ஒருவருடன் சுற்றுலாச் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். சென்னை ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் இருவரும் ஏறி உள்ளார்கள்.
இரவு 7:45 மணிக்கு நடைமேடை ஒன்பதில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலின் படிக்கட்டு பகுதியில் நின்று கொண்டு அவரது ஆண் நண்பருடன் காருண்யா பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது ரயிலானது புறப்பட்டுள்ளது. இதனால் எதிர்பாராத விதமாக காருண்யா கீழே விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற ஆண் நண்பரும் கீழே விழுந்தார். இதில் காருண்யா ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே விழுந்த நிலையில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக அங்கு இருந்த போலீசார் அவரை மீட்டனர். இந்த விபத்தில் காருண்யாவின் வலது கால் மற்றும் இடுப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரயில் நிலையத்தின் ஒன்பதாவது நடைமேடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.