வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் வரும் நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் செப்டம்பர் நான்காம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மன்னார்வளைகுடா தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டரில் இருந்து 65 கிலோமீட்டர் வரை சூறைக்காற்று வீசும். அதேபோல் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 70 லிருந்து 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவே மீனவர்கள் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய, மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறி விசாகப்பட்டினம்-கோபால்பூர் இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை அறிவிப்பைப் பொறுத்தவரை செப்டம்பர் ஆறாம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை தமிழக மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் 30 லிருந்து 40 கிலோமீட்டர் வேகத்தில் வலுவான தரைக் காற்று வீசக்கூடும். செப்டம்பர் 3 முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.