கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலை அபகரிப்பு செய்தது என அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மயங்கி விழுந்தார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினர்.