Skip to main content

கூலிப்படையால் அதிமுக பிரமுகர் படுகொலை... பீதி... பரபரப்பு...!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், சங்கராப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சின்னத்தங்கம் என்ற ராதாகிருஷ்ணன். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.

 

Erode incident- admk

 



இன்று காலை மூலக்கடை என்ற இடத்தில் உள்ள  அரசு மாதிரிப் பள்ளிக்கூடத்திற்கு  எதிரில் நின்று கொண்டு  மற்றொருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கருப்பு நிற ஸ்கார்பியோ காரிலிருந்து இறங்கிய ஒரு கும்பல் அரிவாளை எடுத்துக் கொண்டு ராதாகிருஷ்ணனை நோக்கி ஓடி வந்தது. பயந்து போய் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்தார் ராதாகிருஷ்ணன்.

ஆனால் அந்த கும்பல் ஓடிப்போய் அவரை பிடித்து  சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு, சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடியது. உடல் முழுக்க வெட்டுக் காயம் பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராதா கிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

 



பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு செல்லும் வழியில் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொடூரக்கொலை அந்தியூர், பவானி, கோடி செட்டிபாளையம் பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ராதாகிருஷ்ணன்  கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்