இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்த சூழலில் அவர் போதைப்பொருள் கடத்த இருப்பதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தப் புகாரின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் விடுதியில் உதயகுமார் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பெரம்பூரில் உள்ள அக்பர் அலி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 280 கோடி மதிப்புள்ள 56 கிலோ போதைப்பொருளை கடந்த 22 ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருளை மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடந்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை என்.ஐ.ஏ. விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மியான்மரில் இருந்து போதைப்பொருள் கடத்தப்பட்டதில் தீவிரவாத தொடர்பு உள்ளதா என என்.ஐ.ஏ. விசாரிக்க உள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் குறித்த விரிவான தகவல் கேட்டு இலங்கை தூதரகத்திற்கு என்.ஐ.ஏ. கடிதம் எழுதியுள்ளது. மேலும் போதைப் பொருள் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா என விசாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் போதைப் பொருளைக் கடத்துவதற்கு மூளையாக செயல்படும் நபர்களை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.