Skip to main content

வரனே அவசியமுண்டு திரைப்படத்தில் இழிவாகச் சித்தரிக்கப்பட்ட காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்! சீமான் 

Published on 27/04/2020 | Edited on 27/04/2020
Seeman



துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் பிரபாகரன் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். 
 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட (Varane Avashyamund)” திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், தமிழ்த்தேசிய இனத்தின் முகமாகவும் முகவரியாகவும் அடையாளமாகவுமிருக்கும் இப்பேரினத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர்ந்த உன்னதத் தலைவராம் மேதகு.வே.பிராபகரன் அவர்களின் பெயரை தவறாகப் பயன்படுத்திக் அவமதிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டிருப்பது  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 

 

உலகமே வியக்கும் தம்முடைய போர்த்திறனாலும், மரபு சார்ந்த நவீன வலிமை வாய்ந்த இராணுவ கட்டமைப்பினாலும், கட்டுகோப்பான ஒழுக்கத்தினாலும், இன விடுதலைக்குக் குரல்கொடுக்கும் உலக மாந்தர்களால் இன்றளவும் போற்றப்படும் மேதகு. வே.பிரபாகரன் அவர்களைத் நடிகர் துல்கர் சல்மான் அவர்களோ, அல்லது தொடர்புடைய அவரது படக்குழுவினரோ அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும் துல்கர் சல்மான் அவர்களின் நடிப்பில் வெளிவந்த முந்தைய படமான “காம்ரேட் இன் அமெரிக்கா (COMRADE IN AMERICA)" திரைப்படத்திலும் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன்படுத்த பட்டிருப்பதால் அவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கக்கூடும். அந்தக் காட்சியிலும் ஒரு குடிகாரர் வீட்டில் இருக்கும் அப்புகைப்படம் இறந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்டப்பட்டிருப்பதும் இயல்பானதாக இல்லை.

 

 

எனவே தெரியாமல் வைத்துவிட்டோம் என்றோ, கேரளாவில் அது பெரும்பாலானோர் வைத்திருக்கும் பொதுப்பெயர் என்றோ துல்கர் சல்மான் அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. படக்குழுவினர் நினைத்திருந்தால் இப்படி ஒருகாட்சியில் அத்தகைய பெயரை பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். மேலும் படக்குழுவினருக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்றால் அந்த ஒரு குறிப்பிட்ட பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்ற கேள்வியும் எழுகிறது. பழைய படத்தில் இடம்பெற்ற தொடர்ச்சி அந்தக் காட்சி என்றால் அது இன்றைய சூழலில் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் கணித்திருக்க வேண்டும்.
 

தமிழக இளம் தலைமுறையிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே தற்போது துல்கர் சல்மான் அவர்கள் பொதுவெளியில் மன்னிப்புக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை தங்களுடைய படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிப்பு என்பது தொடர்ந்துக்கொண்டே இருக்குமென்று எச்சரிக்கிறேன். எனவே காயம்பட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து உணர்வையும், அவர்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டின் தீவிரத்தையும் உணர்ந்து படத்திலிருந்து அக்காட்சியை முழுமையாக நீக்கவேண்டும்.

 

ே்


மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு மலிவான காட்சிகள் மூலம் தமிழர்கள், தமிழ்த் தலைவர்களை இழிவுபடுத்திவிடலாம் என்ற சிந்தனையே எழாமல் இருப்பதுதான் இரு சகோதர தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் நலம்பயக்கும் என்பதைத் தொடர்புடைய படக்குழுவினர் உணர்ந்து செயல்படுவர் என்று நம்புகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.