Skip to main content

இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமையுள்ளது! -34 ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தவர் வழக்கில் தீர்ப்பு!

Published on 26/01/2020 | Edited on 26/01/2020

முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ 2 -வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமையுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பஞ்சாயத்து யூனியனில் கிராம மருத்துவராகப் பணியாற்றியவர் டாக்டர் சின்னச்சாமி. இவருக்கும் பஞ்சோலை என்பவருக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் பிறந்தன.  அதன் பிறகு, சின்னச்சாமி சரோஜினிதேவி என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். அவருக்கு 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கடந்த 1997-ல் பஞ்சோலை மரணமடைந்தார். டாக்டர் சின்னச்சாமி கடந்த 1999-ல் ஓய்வு பெற்றார்.

 

 The second wife is entitled to a family pension! Verdict for 34-year-old husband

 

இதையடுத்து, தனது குடும்ப ஓய்வூதியத்திற்கு வாரிசாக 2 -வது மனைவி சரோஜினிதேவியை நியமித்தார்.

கடந்த 2009 ஜனவரி 20-ல் டாக்டர் சின்னச்சாமி மரணமடைந்ததைத்  தொடர்ந்து,  தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரி சரோஜினிதேவி, உள்ளாட்சி நிதித்துறையிடம்  மனு கொடுத்தார். அரசு ஊழியர்களாக இருந்தால் 2-வது மனைவி ஓய்வூதிய பலன்களைப்பெற ஓய்வூதிய விதிகளில் இடமில்லை எனக்கூறி அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  தனக்கு கணவரின் குடும்ப ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிடக்கோரி சரோஜினிதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், டாக்டர் சின்னச்சாமியின் முதல் மனைவி இறந்துவிட்டதாலும், 34 ஆண்டுகள் மனுதாரரும், சின்னச்சாமியும் கணவன் - மனைவியாக வாழ்ந்துள்ளதால், அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

முதல் மனைவி விவாகரத்து வாங்கினாலோ அல்லது இறந்துவிட்டாலோ நீண்டநாட்கள் கணவருடன் வாழ்க்கை நடத்தும் 2 -வது மனைவிக்கு ஓய்வூதிய பலன்களைத் தரலாம் . 2009 ஜனவரி 20 முதல் இதுவரைக் கணக்கிட்டு, மனுதாரருக்கு 12 வாரங்களில் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்