Skip to main content

சசிகலா 'மால்' வாங்கிய விவகாரம்: பினாமி சட்ட நடவடிக்கை சரியென வருமான வரித்துறை விளக்கம்..!

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

Sasikala Mall acquisition case: Income tax department explanation for benami legal action ..!


மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளைப் பயன்படுத்தி, மால்களை சசிகலா வாங்கிய விவகாரத்தில், அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக, பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சரியே என, வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

கடந்த 2016 நவம்பர் மாதம், 500 மற்றும் 1,000 ரூபாய் கரன்சிகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கரன்சிகளைப் பயன்படுத்தி, சொத்துகளை வாங்கியதாக, சசிகலா மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.


இதுபோல, 130 கோடி ரூபாய் மதிப்பிலான, மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளைப் பயன்படுத்தி, சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால்-ஐ வாங்கிய விவகாரம் தொடர்பாக, மால் உரிமையாளர்கள் கங்கா பவுண்டேஷன், பாலாஜி மற்றும் வி.எஸ்.ஜே தினகரன் ஆகியோர் மீது, பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.


இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, ‘மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளைப் பெற்று மால்-ஐ விற்பனை செய்ததற்காக, எங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே, ஸ்பெக்ட்ரம் மால்-ஐ விற்பனை செய்துள்ளதால், எங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தைப் பயன்படுத்த முடியாது’ என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.


இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மால்-ஐ விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக, அவர்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகினார்கள். இந்தச் சந்திப்பு, பண மதிப்பிழப்புக்கு முன்பே நடந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை, வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பினாமி சட்டத்தைப் பயன்படுத்தியது சரியே’ என வாதிட்டார்.

 

அவரது வாதம் முடிவடையாததை அடுத்து, வழக்கின் விசாரணையை, பிப்ரவரி 5ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்