நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி என்ற புதிய மாவட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்தது. தென்காசியுடன் சங்கரன்கோவில் தொகுதியும் இணைக்கப்படுவதை அறிந்த சங்கரன்கோவில் மற்றும் தென்காசியின் ஒரு பகுதியான வி.கே.புதூர் நகர மக்களும் கடுமையாக எதிர்த்தனர். அடிமட்ட வாழ்க்கையின் பொருட்டு தங்கள் பகுதிகள் நெல்லையுடனே நிலைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் சங்கரன்கோவில் தொகுதி வானம் பார்த்த பூமி மற்றும் தென்காசிக்கு நெல்லையைவிட மிகவும் தொலைவில் உள்ளது. தவிர வளமான தென்காசி மாவட்டத்துடன் இணைந்தால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய விவசாய வறட்சி நிவாரணங்கள் மற்றும் பஞ்ச நிவாரணங்கள் கிடைக்காமலே போய்விடும் என்று சங்கரன்கோவில் தொகுதியின் விவசாய சங்கத் தலைவரான சந்தானம் தலைமையிலான விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
அத்துடன் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான வைகோவும் சங்கரன்கோவில் நெல்லையுடன் நீடிக்க வேண்டும், தென்காசியுடன் இணைக்கப்பட்டால் சங்கரன்கோவில் தொகுதியின் கீழ்புறப் பகுதியான சங்கரன்கோவில் குருவிகுளம் ஒன்றியம் மற்றும் திருவேங்கடம் தாலுகா இதர யூனியன் பகுதியிலுள்ள மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட ஜீவாதார வாழ்வாதாரங்கள் பாதிப்பதோடு, அம்மக்களுக்குத் தென்காசி மிகவும் தொலைவான பகுதி என்பதால் அடிதட்டு மக்கள் தங்களின் உரிமைகளை பெறுவதற்கு தென்காசி சென்று வருவதில் மிகவும் சிரமம் என்று மக்களின் குமுறல்களையும், கொந்தளிப்பையும் அரசுக்கு நேரடியாகவே கோரிக்கை மனுக்கள் மூலம் தெரிவித்தார்.
இதனிடையே இணைப்பு தொடர்பாக மக்களின் கருத்தை அறிய வந்த வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கமிட்டியிடம் சங்கரன்கோவில் பகுதி மக்கள், தென்காசியுடன் இணைக்கப்பட்டால் தங்களின் நடைமுறை வாழ்க்கைகள் துன்பங்கள் துயரங்களை விரிவாக அவரிடம் பதிவு செய்தனர். அத்துடன் தங்கள் பகுதி நெல்லையுடன் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதே நேரம் சங்கரன்கோவில் மாவட்ட கோரிக்கை இயக்கத்தினர், தென்காசி தலைமையிடமானால் மேற்கு மூலையிலிருக்கும் தென்காசிக்கு கீழ் முனைப்பகுதிகள் மற்றும் கிராமப் புற மக்கள் அங்கு சென்று வருவதில் மிகவும் சிரமப்படுவர். போக்குவரத்து வசதியற்ற நிலையில் பொழுது போய்விடும். எனவே சங்கரன்கோவிலைத் தலைமையிடமாய் வைத்தால் அனைத்து தொகுதி மக்களும் மத்தியிலிருக்கும் இங்கே வந்து செல்வதில் கால நேரமும் குறையும். மேலும் 1996லேயே சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அப்போதைய அரசிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டது என்றும் கடையடைப்பு மற்றும் பேரணி நடத்தி அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் அனைத்து அதிகாரிகளும் மக்களின் சிரமங்களையும் எதிர்ப்புகளையும் அரசுக்கு முறையாகத் தெரிவித்தனர். மக்களின் இந்த சிரமங்கள் அனைத்தையும் பரிசீலிக்காதத் தமிழக அரசு சங்கரன்கோவிலை இணைத்து தென்காசி மாவட்டம் வரும் 22ம் தேதி உதயமாகும் என்று அறிவித்தது. இதனால் ஆத்திரமான சங்கரன்கோவில் தொகுதி மக்கள் கொதிப்படைந்தனர். அரசு மக்களின் கோரிக்கையைப் புறந்தள்ளியதோடு தென்காசியோடு இணைத்ததை தங்களின் வருத்தத்தையும் கம் கண்டனத்தையும் தெரிந்தது கண்டனப் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இதுதான் ஆரம்பம். எங்களின் இந்தப்போராட்டம் இனிமேல் தான் மிகவும் வலுப்பெறும் என்று அதன் நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. விவகாரமாய் கிளம்பியுள்ள இந்த நெருப்புப் புள்ளி விரிவடையலாம் என்பதே யதார்த்தமாகத் தெரிகிறது.