
சேலம் அருகே, மர்மப்பொருள் வெடித்துச் சிதறியதில் விவசாயி ஒருவர் நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும், சிறுமி உள்பட மூவர் பலத்த காயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் மணி (50). விவசாயி. இவர், புதன்கிழமை மாலை தனது பூத்தோட்டம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில், எப்.எம். ரேடியோ போன்ற மின்சாதனம் ஒன்று கிடந்துள்ளது. கேட்பாரற்றுக் கிடந்த அப்பொருளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச்சென்றார்.
அந்த மர்மப்பொருள் மின் வயர்கள், பேட்டரியும் பொருத்தப்பட்டு இருந்ததால் அதை எப்.எம். ரேடியோ என எண்ணிய மணி, அதிலிருந்த மின் வயர்களை இணைத்து, சுவிட்ச் பாக்சில் இணைத்து பரிசோதித்துப் பார்த்தார். திடீரென்று அந்தப் பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், அருகில் இருந்த அவர் மீது அந்த மின்சாதனத்தில் இருந்த பொருள்கள் சிதறியதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
இந்தச் சம்பவத்தில் மணியின் ஒரு பக்கக் கை துண்டானது. தலை, முகம் ஆகிய இடங்களில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மணி, ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.
மர்மப் பொருளில் இருந்து சிதறிய பாகங்கள் சம்பவத்தின்போது வீட்டில் இருந்த மணியின் பெயர்த்தி சவ்ரூபியா (10), உறவினர்கள் நடேசன் (65), வசந்தகுமார் (37), ஆகியோர் மீதும் தெறித்து விழுந்ததால் அவர்களும் பலத்த காயம் அடைந்தனர். மூவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மர்மப்பொருளின் சிதறிய பாகங்கள் வீட்டு மேற்கூரை, ஜன்னலில் பட்டதால் அவையும் சேதம் அடைந்தன. மணியின் வீட்டில் வெடித்தது என்ன வகையான பொருள் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. மாவட்ட வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினர், கியூ பிரிவு காவல்துறையினரும் மர்மப்பொருள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மின்கலம் போன்ற பொருளில் மின் வயர்களைத் தவறான இணைப்பு கொடுக்கப்பட்டதால் வெடித்ததா? அல்லது மணிக்கு எதிரான விரோதிகள் யாராவது திட்டமிட்டே வெடிக்கும் பொருள்களைச் சாலையில் வீசிச்சென்றார்களா என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.