Skip to main content

சேலம் அம்மா உணவகங்களில் இனி எல்லாமே இலவசம்தான்! இன்று முதல் அமல்!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


கரோனா தொற்று அபாயத்தால் ஊரடங்கு முடியும் வரை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இனி இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டலங்களிலும் 11 அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இதேபோல், ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர், நரசிங்கபுரம் ஆகிய நான்கு நகராட்சிகள் சார்பிலும் தலா ஒரு அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்ற ஏழைகள் காலை, மதியம் சாப்பிட்டு வருகின்றனர். 
 

 

SALEM DISTRICT AMMA RESTAURENT ALL FOOD FREE


இந்நிலையில், கரோனா தொற்று அபாயம் இருப்பதால் கடந்த மார்ச் 24-ம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் 99 சதவீதத்திற்கும் அதிகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் வீடற்ற சாலையோரவாசிகள், வருமானமின்றி தவிக்கும் தினக்கூலிகள் பசியாறும் வகையில் மாநிலம் முழுவதும் அம்மா உணவகங்கள் மட்டும் எப்போதும் போல் செயல்பட்டு வருகின்றன.

சேலத்தில், அம்மா உணவகங்களில் உணவுடன் முட்டையும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் 5 ரூபாய், தக்காளி சாதம் 3 ரூபாய் என வழக்கமான விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கால் வேலையின்றியும், வருவாயின்றியும் தவித்தும் வரும் ஏழைகளுக்காக, ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பும்வரை, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் அனைத்து வகை உணவுகளும் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார.
 

http://onelink.to/nknapp


இத்திட்டம் இன்று (ஏப். 20) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான செலவுகளை அதிமுக கட்சி ஏற்றுக்கொள்ளும் என்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதேபோன்ற சலுகையை மாநிலம் முழுவதும் செயல்படுத்த அதிமுக முன்வர வேண்டும் என்றும் மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்