Skip to main content

அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை!!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020


சேலத்தில் அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரித்துள்ளார்.

சேலத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ராமன் வெள்ளிக்கிழமை (ஏப்.10) ஆலோசனை நடத்தினார்.
 

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மளிகைப்பொருள்கள், காய்கறிகள், பழங்கள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் தடையின்றி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

 

salem collector raman meeting coronavirus prevention discussion with officers


கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளாக தனிமனித சுகாதாரம், தனிமைப்படுத்துதல், சமூக விலகல் போன்றவற்றை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். 144 தடை உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்களை, ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை ஒரே நேரத்தில் வாங்கிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். 144 தடை உத்தரவை மீறி, தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் மொத்த விற்பனையாளர்கள் தங்களுடைய சரக்குகளை எடுத்து வருவதற்குத் தேவையான வாகன அனுமதியும், பணியாளர்களுக்கான அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருள்களை தடையின்றி எடுத்து வர மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி அளித்துள்ளது.

அதேபோல் காய்கறிகள், பழங்கள், பூக்களின் மொத்த வியாபாரிகளையும், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் கூட்டம் நடத்தப்பட்டு அவர்களுக்கும் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
 

http://onelink.to/nknapp



விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட விளைபொருள்களை நேரடியாக கொள்முதல் செய்து வருவதற்கும் தேவையான வாகன வசதிக்கான அனுமதியும் மாவட்ட நிர்வாகம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கொள்முதல் செய்யப்படும் பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அப்பொருள்களுக்கான விலைப்பட்டியல்களை ஒவ்வொரு கடைகளிலும் கட்டாயம் வைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள குளிர்பதன கிடங்குகளில் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக வைத்து பாதுகாத்துக் கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள் ஒரு வார காலத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கிச்செல்ல முன்வர வேண்டும். நாள்தோறும் வாங்க வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். 

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் தங்கி இருந்த பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக பொதுமக்கள் அதிகம் நடமாடுவதைத் தடுக்கும் விதமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அப்பகுதியில் உள்ள மக்களுக்குக் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அவரவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கிடைப்பதற்காகத் தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சிகள், மாநகராட்சி உள்ளிட்டவற்றின் சார்பில் நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குறைந்த விலையில் 100 ரூபாய்க்கு காய்கறிகள், 60 ரூபாய்க்கு பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 
 

பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கும், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுத்திட சமூக விலகலை முழுமையாக பின்பற்றிட வேண்டும். 

மேலும், 144 தடை உத்தரவை முழுமையாக கடைப்பிடிக்கும் விதமாக சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கிச் செல்ல வருபவர்களின் வாகன பயன்பாட்டினை குறைக்கும் விதமாகவும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வண்ணம் தீட்டப்பட்டு, அந்த வண்ணம் உடைய வாகனங்கள் மட்டும் அந்தந்த நாளில் வாரத்திற்கு ஒருமுறை அனுமதிக்கப்படுகிறது என சேலம் மாநகர காவல் ஆணையர் இங்கே விளக்கி உள்ளார். 
 

http://onelink.to/nknapp



இந்த நடைமுறை அத்தியாவசியப் பொருள் விற்பனை செய்வோருக்கோ, உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள் கொண்டு வரும் விவசாயிகளுக்கோ பொருந்தாது. மேலும், வேளாண்மைத் துறையின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கொண்டு வருவதற்கு தினமும் வந்து செல்லலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்தார். 


 

 

சார்ந்த செய்திகள்