Skip to main content

சேலத்தில் சக்கை போடு போடும் போதை மாத்திரை கும்பல்; பிடிபட்ட அதிர்ச்சி தகவல்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Salem addiction pills

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள், உடல்  உழைப்புத் தொழிலாளர்கள் கள், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட மாற்று போதைப் பொருட்களைத் தேடிச்செல்கின்றனர். குறிப்பாகச் சேலத்தில் இளைஞர்கள் அண்மைக் காலமாக போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. தூக்க மாத்திரைகள், ஆல்கஹால் அதிகமுள்ள சிரப் வகை  மருந்துகள், வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. ஆனாலும் விதிகளை மீறி சில மருந்துக் கடைகளில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு  வருவது தொடர்கிறது.

மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது மருந்து கடைகளில் சோதனை நடத்தி, விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும்,  இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இந்நிலையில், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் நான்கு சாலை பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், சேலம் செவ்வாய்ப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(22),  தட்சணாமூர்த்தி(22), வீரபாண்டி ராஜ வீதியைச் சேர்ந்த அர்ஜூனன்(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள், நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள மருந்து விற்பனை பிரதிநிதிகள் சிலரிடம் நேரடியாக வலி நிவாரணி மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி போதைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றைக்  கூலித்தொழிலாளர்கள், இளைஞர்களைக் குறி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனையும் செய்துள்ளனர். பத்து  மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 100 ரூபாய்க்கு வாங்கி, அதை 200 ரூபாய்க்கு விற்று வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900  மாத்திரைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப் பிறகு, சேலம் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் குறித்தும், பிடிபட்ட இளைஞர்களுடன்  வேறு யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர். இளைஞர்களின் புதிய போதைக் கலாச்சாரம், சேலம் மக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி  உள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பள்ளிகளுக்கிடையே மோதல்; முட்டிக்கொள்ளும் மாணவர்கள் - கதிகலங்கும் கோட்டைமேடு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
School students clash in Coimbatore

கோவை மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள வின்சென்ட் சாலைப் பகுதியில்.. சிட்டி பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, கோட்டைமேடு பள்ளி என மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் கோவை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே, இந்த மூன்று பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குள் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக சொல்லப்படுகிறது.

காலையில் பள்ளிக்கு செல்லும் நேரத்திலும் மாலையில் வீடு திரும்பும் சமயத்திலும் மாணவர்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கின்றனர். அதில், மாநகராட்சி பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்ட சிட்டி பள்ளி மாணவர் தன் ஊருக்குள் இருக்கும் நண்பர்களை அழைத்து வந்து.. தன்னை தாக்கியவர்களை திருப்பி அடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் வின்சென்ட் சாலையில் உள்ள சந்துப் பகுதியில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த மாணவர்களைத் தடுக்க முயற்சித்தனர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில், அங்கிருந்த நபர் ஒருவர் பள்ளி சீருடையில் சண்டை போட்டுக்கொண்டிருந்த மாணவர்களை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கியுள்ளார். இதைப் பார்த்ததும்.. அவர் தங்களைப் போலீசில் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து கலைந்துச் சென்றனர். பின்னர், இது குறித்து உக்கடம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ஸ்பாட்டுக்கு வந்த போலீசார்.. இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். தற்போது, இது சம்மந்தமான வீடியோ சோசியல் மீடியா உள்ளிட்ட தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம், இங்குப் படிக்கும் ஒரு சில மாணவ - மாணவிகள் சமீப காலமாக பல்வேறு தவறுகளை செய்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது போதையில் இருந்த பள்ளி மாணவி ஒருவர் நடுரோட்டில் படுத்து தூங்கியதும் பள்ளி சீருடையில் மது வாங்க சென்றதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல், பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் காதல் விவகாரம், போதைப் பழக்கம், சாதி சண்டை போன்ற பிரச்சனைகளால் பேருந்து நிலையம், பள்ளிக்கு அருகில் உள்ள பேக்கரி கடைகள் போன்ற பகுதிகளில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

இது சம்மந்தமான விஷயங்களில் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை அரசு மற்றும் காவல் துறையினரும் கருத்தில் கொண்டு உரிய விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்கால சமுதாயத்தைப் பாதுகாக்க முடியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story

திருமணத்தை மீறிய உறவை நிறுத்திகொண்ட பெண்; பெட்ரோல் ஊற்றி எரித்த 60 வயது முதியவர்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
60-year-old man who burned his woman with petrol

சென்னை வியாசர்பாடிக்கு அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு 50 வயதாகிறது. இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஆறுமுகம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனிடையே, மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்துவந்த செல்வி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையில், செல்விக்கு புளியந்தோப்பு கனகராயத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான சுப்ரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒருகட்டத்தில் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி சந்தித்து  தனிமையில் இருந்து வந்தனர். நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் அதிகரிக்கவே சுப்ரமணியும் செல்வியும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அதே நேரம், சுப்பிரமணிக்கு ஏற்கனவே திருமணமாகி தனியாக குடும்பம் உள்ளது. இருந்தபோதும் சுப்பிரமணி செல்வியுடன் தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். 

இத்தகைய சூழலில், செல்வியின் பிள்ளைகள் பெரியவர்களாக வளர்த்துவிட்ட நிலையில் தாயின் திருமணத்தை மீறிய உறவு அவர்களுக்குக் கோபத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒருகட்டத்தில், இதனைப் புரிந்துகொண்ட செல்வி சுப்பிரமணியுடன் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தியுள்ளார். அதன்பிறகு, இனிமேல் வரவேண்டாம் எனக் கூறிய செல்வி சுப்பிரமணியுடன் பேசுவதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டார். ஆனால், சுப்பிரமணி செல்வியுடன் பேசத் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க செல்வி தனது மகளை கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தனது மகளை பார்ப்பதற்காக செல்வி ஓட்டேரி பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 26 ஆம் தேதி செல்வி தனது மகள் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த தகவலை அறிந்த சுப்பிரமணி மதியம் 2 மணியளவில் செல்வியின் மகள் வீட்டிற்கு வந்து செல்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருவரும் மீண்டும் கணவன், மனைவி போல சேர்ந்து வாழலாம் என சுப்பிரமணி கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த செல்வி, "இதெல்லாம் சரியா வராது. பசங்கெல்லாம் தோளுக்கு மேல வளந்துட்டாங்க. நீங்க உங்க வழிய பார்த்துக்கோங்க" எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சுப்பிரமணி, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து செல்வியின் தலையில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீப்பற்றி எரிய ஆரம்பித்ததும் செல்வி அலறியடித்து அங்கும் இங்குமாக ஓடியுள்ளார். இதில் சுப்பிரமணி மீது பெட்ரோல் பட்டு, அவர் மீதும் தீ பற்றியதால் இருவரும் தீயில் எரிந்துள்ளனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த செல்வியின் மருமகன் தனது மாமியார் செல்வியின் தீயை அணைக்க முற்பட்டார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர், இவர்களுடைய சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து, 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு செல்வி 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுப்பிரமணி மற்றும் செல்வியின் மருமகன் ஆகிய இருவரும் 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகாத உறவு விவகாரத்தில் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.