Skip to main content

ரூ. 57.74 லட்சம் இழப்பீடு வழங்க அப்போலோ மருத்துவமனைக்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு!

Published on 13/09/2018 | Edited on 13/09/2018

 

apollo

 

ரூ. 57.74 லட்சம் இழப்பீடு வழங்க அப்போலோ மருத்துவமனைக்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பெஜ்ஜிபூரை சேர்ந்த நரசிங்க பதி, குரி பதி ஆகியோரின் மகனான அபானிகுமார் பதி சென்னையில் உள்ள டாக்டர் ரெட்டி லேபரட்டரியில் மாதம் 30 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வந்தார். மூல நோய் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உடல் நலம் மோசமாக இருப்பதாக அவரது நண்பர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரது பெற்றோர் அபானிகுமாரை பார்க்க அனுமதி மறுத்ததுடன்,  வென்டிலேட்டரில் வைத்திருப்பதாகவும், மயக்க மருந்து கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நவம்பர் 2-ஆம் தேதி திடீர் மாரடைப்பு, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மயக்கவியல் நிபுணரும், அறுவை சிகிச்சை நிபுணரும் தெரிவித்துள்ளனர். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மதியம் 1 மணி அளவில் அவர் இறந்துவிட்டதாக கூறி 15 நாட்கள் அளித்த  சிகிச்சைக்காக வழங்கப்பட்டதற்காக 3 லட்ச ரூபாயும் வசூலித்துள்ளனர்.



தனது மகனின் மரணத்துக்கு  மருத்துவமனையின் சேவை குறைபாடும் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமுமே காரணம் என்பதால் 96 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு  உறுப்பினர்கள் கே.பாஸ்கரன், எஸ்.எம்.முருகேசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவானி குமாருக்கு திடீர் மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு  சிகிச்சை அளித்ததாகவும் அதன் பலன் இல்லாமல் போகவே அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இதில் மருத்துவ கவனக்குறைவோ அல்லது சேவை குறைபாடோ ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.


இருதரப்பு வாதங்களையும் கேட்டு, ஆவணங்களை ஆராய்ந்த உறுப்பினர்கள், அபானி குமாருக்கு எப்பொழுது மாரடைப்பு ஏற்பட்டது, என்ன மாதிரி சிகிச்சை வழங்கப்பட்டது, மயக்க மருந்து ஏன் கொடுக்கபட்டது என்பது தொடர்பான விவரங்களை முழுமையாக அப்போலோ மருத்துவமனை நிரூபிக்கவில்லை என சுட்டிக் காட்டியுள்ளனர்.



அபானிகுமாரின் மரணத்திற்கு மருத்துவமனை, மருத்துவர்களே காரணம் என  தீர்மானிப்பதாகவும், அதனால் அவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க அப்போலோ மருத்துவமனை மற்றும் இரு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர். அதன்படி அபானிகுமாரின் மரணத்திற்கு இழப்பீடாக 44 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயும், பெற்றோர்களின் மன உளைச்சலுக்கு 10 லட்ச ரூபாயும், அவர்கள் செலுத்திய 3 லட்ச ரூபாய்யும், வழக்குக்காக செலவு செய்ததாக 10 ஆயிரம் ரூபாயும் சேர்த்து 57 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை மருத்துவமனையும், இரு மருத்துவர்களும் வழங்க உத்தரவிட்டுள்ளனர். 



இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் 4 வாரத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  

சார்ந்த செய்திகள்