ஆத்தூர் அருகே, வாரிசு இல்லாத சொத்தை அபகரிக்கும் திட்டத்துடன் விவசாயியை அடித்துக் கொலை செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சாராய வியாபாரி உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், அரியாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பு என்கிற சுப்ரமணி (74). விவசாயியான இவர், திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக ஒரு வீட்டில் வசித்துவந்தார். இவருக்கு சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூரில் சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை, உள்ளூரைச் சேர்ந்த சாராய வியாபாரி பெருமாள் (55) என்பவருக்கு 1.26 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக பெருமாள் அவருக்கு 10 லட்சம் ரூபாய் முன்பணமும் கொடுத்திருந்தார்.
இந்த ஒப்பந்தம் நடந்த சில நாள்களில், அதாவது கடந்த மார்ச் 23ஆம் தேதி விவசாயி சுப்ரமணி திடீரென்று மாயமானார். நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கனகம் என்பவர், தன்னுடைய உறவினர் சுப்ரமணியை காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்து தருமாறும் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தினர் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்தனர். முதற்கட்ட விசாரணையில் சுப்ரமணி காணாமல் போனது ஆத்தூர் சரகத்திற்குள் வந்ததால், இந்த வழக்கின் தொடர் விசாரணையை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதையடுத்து ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுப்ரமணிக்கு குடும்பமோ, நேரடி வாரிசுகளோ இல்லாததை அறிந்த சாராய விபாயாரி பெருமாள், அவரிடம் கொடுத்த 10 லட்சம் ரூபாய் முன்பணத்தையும் பறித்துக்கொண்டு, வாரிசு இல்லாத சொத்தை முற்றிலும் அபகரிக்கும் நோக்கில் அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
தன்னுடைய திட்டத்திற்கு உள்ளூரைச் சேர்ந்த ராமதாஸ் (27), அறிவழகன், சக்திவேல், 19 வயது வாலிபர் உள்பட 6 பேரை ஈடுபடுத்தியுள்ளார். இவர்கள் அனைவரும் சுப்ரமணியை கொலை செய்து, சிவகங்காபுரத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேலின் கரும்பு தோட்டத்தில் அவரின் சடலத்தைப் புதைத்துவிட்டதும் தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக ராமதாஸ், அறிவழகன் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய மூவரையும் முதற்கட்டமாக ஆத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமதாஸ், அறிவழகன் ஆகியோரை சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச்சென்று அந்த இடத்தைக் காட்டும்படி கூறினர். ஆனால் அவர்கள் கூறிய இடத்தில் சடலம் ஏதும் கிடைக்கவில்லை. மூன்று நாட்களாக தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டிப் பார்த்தும் சடலம் புதைக்கப்பட்ட இடம் சரியாக தெரியவில்லை. இதையடுத்து பிடிபட்ட மூவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த பெருமாள், சக்திவேல், நரசிங்கபுரம் தினேஷ், ஓலப்பாடியைச் சேர்ந்த முஸ்தபா ஆகியோரை காவல்துறையினர் தேடிவந்தனர்.
இவர்களில் தினேஷ், ஆத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் ரங்கராஜன் முன்னிலையிலும், முஸ்தபா ஆத்தூர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் முன்னிலையிலும் டிச. 5ஆம் தேதி மாலையில் சரணடைந்தனர். ஏற்கனவே கைதானவர்களில் ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். சரணடைந்தவர்களுள் ஒருவரான முஸ்தபாவையும், சடலம் புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போதும் சுப்ரமணியின் சடலமோ அவருடைய எலும்புகளோ கிடைக்கவில்லை.
இந்நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சாராய வியாபாரி பெருமாள், சக்திவேல் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக சேலத்தில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான காவல்துறையினர் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த அவர்கள் இருவரையும் டிச. 5ஆம் தேதி இரவு கைது செய்தனர். அவர்களையும், திங்கள்கிழமை (டிச. 6) காலையில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியதால் காவல்துறையினர் குழப்பமடைந்தனர். சடலம் புதைக்கப்பட்டு 8 மாதங்களுக்கு மேலான நிலையில், அதன் எலும்புத்துண்டுகள் கூட கிடைக்காதது தொடர்ந்து மர்மமாக இருக்கிறது. உண்மையில், சடலத்தை அவர்கள் சக்திவேலின் தோட்டத்தில்தான் புதைத்தார்களா அல்லது வேறு எங்காவது புதைத்துவிட்டு நாடகம் ஆடுகிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
விவசாயி சுப்ரமணி கொலை சம்பவம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.