
கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கையின் பொழுது அத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 'டாஸ்மாக் கடை பணியாளர்களின் தொகுப்பு ஊதியம் உயர்த்தப்படும்' டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு 1,100 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும். டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு 840 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட்ட தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதிய உயர்வால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 31.57 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். தமிழ்நாட்டில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியான 500 சில்லறை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்' என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மூடப்படுவதற்கான 500 டாஸ்மாக் கடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கணக்கெடுக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. தொழில்முறை, 50 மீட்டருக்குள் இருக்கும் கடை, வருமானம் குறைவாக இருக்கும் கடைகள் உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கணக்கெடுப்பு முடிவுகளின் இறுதியில் 500 கடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.