இந்தியாவில் உள்ள 31 மாநில முதல்வர்கள் தங்களுடைய தேர்தல் பிரமாண வாக்குமூலத்தில் சமர்பித்துள்ள தகவல்களை வைத்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆய்வு நடத்தி பணக்கார முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில், ரூ.931 கோடி சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார முதல்வர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.332 கோடி சொத்து மதிப்புடன் உள்ளார். ரூ.51 கோடி சொத்துக்களுடன் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மூன்றாவது இடத்திலும், ரூ.46 கோடி சொத்துக்களுடன் நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ நான்காவது இடத்திலும், ரூ.42 கோடி சொத்துக்களுடன் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
இதில், ரூ.8 கோடி சொத்து மதிப்புடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 14வது இடத்தில் உள்ளார். மேற்கு வங்க முதல்வராக பொறுப்பு வகித்து வரும் மம்தா பானர்ஜி, ரூ.15 லட்ச சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார். 2023-2024ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானம் தோராயமாக ரூ. 1,85,854 ஆக உள்ள நிலையில், ஒரு முதலமைச்சரின் சராசரி சுய வருமானம் ரூ. 13,64,310 ஆக உள்ளது. இது, இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகமாக உள்ளது.