கர்நாடக அரசால் தரமற்றவை என்று நிராகரிக்கப்பட்ட சைக்கிள்களை தமிழக அரசால் திண்டிவனத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திண்டிவனம், விழுப்புரம் அருகே தழுதாழி என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
அப்படி தமிழக அரசு சார்பாக அவர் வழங்கிய சைக்கிளின் முன்கூடையில் கர்நாடக அரசு முத்திரை பதிக்கப்பட்டு, கன்னட மொழியில் வாசகம் எழுதப்பட்டிருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடகத்திலும் இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு வைத்துள்ளது. அதற்காக கர்நாடக அரசு அவான் என்ற நிறுவனத்தை அணுகி அதற்காக சைக்கிள் உற்பத்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள் தரமற்றவை என பரிசோதனைக்கு பின் தெரியவந்ததை அடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்க கூடாது. அப்படி வழங்கப்பட்டால் அந்த சைக்கிள்கள் ஒரு வருடத்தில் பழுதடைந்து அரசுக்கு கெட்ட பெயர் வரும் என எண்ணி அந்த சைக்கிள்களை புறக்கணித்துள்ளது.
ஆனால் அப்படி கர்நாடக அரசு புறக்கணித்த அந்த அவான் நிறுவன சைக்கிள்களை நிறுவனம் வேறு வழியில்லாமல் தமிழக அரசுக்கு வழங்கிய நிலையில், குறிப்பிட்ட பள்ளியில் அந்த சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்திடமிருந்து சைக்கிள்களை தயாரித்து பெறவிருப்பதை கர்நாடக அரசு நிறுத்தியுள்ளது. அதேபோல் அவான் நிறுவனத்திடமிருந்து சைக்கிள்களை வாங்குவதை நிறுத்த பரிசீலனை செய்யுமாறு முதலமைச்சர் குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையையும் நிறுத்தி வைக்குமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் கர்நாடக கல்வித்துறை செயலாளர் ஷாலினி ரஜினிட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கர்நாடக அரசால் நிராகரிக்கப் பட்ட தரமற்ற சைக்கிள்கள் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.