Skip to main content

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
Red alert for 4 districts

வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அறிவித்தபடி மழை பெய்து கொண்டிருக்கிறது. வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 08.20 மணி வரை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும். எனவே இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று (17.12.2023)இரவு 08.20 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிகனமழை எச்சரிக்கை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (18.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுத்திருந்ததும், திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (18.12.2023) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.