அதிமுக தலைமை கழகத்தின் பேச்சாளராக இருந்த அனிதா குப்புசாமி அரசியலில் இருந்தே சில காலம் விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை பெசண்ட் நகரில் உள்ள இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் நடவடிக்கை சரியில்லை. ஜெயலலிதா வழிகாட்டுதலுக்கு எதிராக சில செயல்கள் நடக்கிறது. அவர்கள் வழியில் இவர்கள் நடக்கவில்லை. அதனால் அதிமுகவில் இருந்து விலகுகிறேன். வேறு எந்த அணியிலும் இணையப்போவதில்லை.
பொதுவாழ்க்கையை குறித்து யார் தான் சிந்திக்கிறார்கள்? டூவிலர் கூட வாங்க முடியாத சாதாரண மக்கள் தான் பேருந்தை உபயோகப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் கலைஞராக இருந்தாலும், ஜெயலலிதாவக இருந்தாலும் இதை செய்வார்களா? அனுபவப்பட்ட தலைவர்கள் அவர்கள். இப்படி பேருந்து கட்டணத்தை விலை ஏற்றுவார்களா? என்றுக்கூறி பேட்டியை முடித்தார்.
அதன் பின் குறிப்பிட்ட சில நிருபர்களிடம் பேசிய அவர்,
என் கணவர் குப்புசாமிக்கு கட்சியில் சேரும் போதே இசைக்கல்லூரி துணைமுதல்வராக பதவி தருவதாக ஜெயலலிதா என்னிடம் கூறியிருந்தார். ஆனால், அதன் பின் அவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து, உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டு ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையில் அணி பிரிந்தது. அதன் பின்னும் கட்சியில் தொடர்ந்து இருந்தேன். ஆனால் ஜெயலலிதா சொன்னப்படி, தற்போது உள்ளவர்கள் இசைக் கல்லூரியில் என் கணவருக்கு பதவி வழங்கவில்லை. அதனால் தான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Published on 14/02/2018 | Edited on 14/02/2018