Skip to main content

“ஜெயலலிதா போலவே கமலும்..” -மக்கள் நீதி மய்ய வட்டாரத்திலிருந்து குமுறல்!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 

“என் வழி தனி வழி என்று சினிமாவில் ரஜினி பேசிய வசனம், நிஜத்தில் கமலுக்குத்தான் பொருந்துகிறது..” என்று குமுறலோடு சொன்னார் சீனிவாசகம். 


விவகாரம் இதுதான் – 

 

k


மக்கள் நீதி மய்யம் விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசகத்தை கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று நீக்கிவிட்டது அக்கட்சி. 
அது என்ன கட்சி விரோத நடவடிக்கையாம்?


கடந்த சில நாட்களாகவே கமல் மீதும் கட்சி குறித்தும் அதிருப்தியில் இருந்த சீனிவாசகம், இன்று காலை விருதுநகர்  திமுக மா.செ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். வீட்டு பக்கம் சென்றார். அவருடைய இந்த நடவடிக்கையை ம.நீ.ம. கட்சியினர் தலைமையிடம் புகாராகச் சொன்னார்கள். ராஜினாமா எழுதிக்கொடுத்து பொறுப்பிலிருந்து விலகுவதற்குத் தயாரான நிலையில்தான்,  திமுகவில் சேர்வதற்கு ஆயத்தமாகியிருக்கிறார். அதற்குமுன்,   ‘இவர் என்ன ராஜினாமா செய்வது? நாமே நீக்கிவிடலாம்’ என்று கட்சித் தலைமை கருதிவிட,  சீனிவாசகத்தின் ராஜினாமா வந்து சேர்வதற்கு முன்பாகவே,  நீக்க அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.   

 

a


சீனிவாசகத்தை தொடர்பு கொண்டோம். 
“பணத்துக்காக கே.கே.எஸ்.எஸ்.ஆரை பார்க்க நான் சென்றதாகச் சொல்வது தவறு. அண்ணா காலத்திலிருந்தே  நாங்க திமுக குடும்பம்தான். மு.க.அழகிரி அழைத்தும் நான் செல்லவில்லை. இப்போது  என்ன நடந்தது என்று நானே சொல்கிறேன்.” என்றவர் “விருதுநகர், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களாக முனியசாமியையும் முனிஸ்வரனையும் தன்னிச்சையாக அறிவித்துவிட்டார் கமல். மாவட்ட பொறுப்பாளர்களான எங்களின் அபிப்ராயத்தை கேட்கவே இல்லை.

 

 கமல் இப்படி செயல்பட்டால், பொறுப்பாளர்களால் மாவட்டத்தில் எப்படி செயல்பட முடியும்?  அவர் இப்படி நடந்துகொள்வது யாருக்கும் பிடிக்கவில்லை. நான் படித்தவர்களை மட்டுமே கையில் வைத்துக்கொள்வேன் என்றால், சொந்தப் பணத்தை செலவழித்து  கட்சி வேலை பார்ப்பதற்கு எங்களுக்கு எப்படி  மனசு வரும்?  இன்றுமட்டும் மூன்று பேர் கமல் கட்சியிலிருந்து விலகியிருக்கிறோம். நான் சொல்லாமல் கொள்ளாமல் திமுகவில் போய் சேர்ந்துவிட்டேன். நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார், நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கருணாகர ராஜாவெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்கள். 

 

n

 

கஜா புயல் சமயத்தில் பொள்ளாச்சிகாரரான மகேந்திரன் என்பவர் கட்சிக்குள் வந்தார்.  அவரும் அருணாச்சலமும்தான் கட்சியில் குளறுபடி செய்பவர்கள். ஜெயலலிதா எப்படி சசிகலா கைக்குள் இருந்தாங்களோ, அதே மாதிரி மகேந்திரன், அருணாச்சலம் பிடியில் கமல் இருக்கிறார். 

 


கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் நடத்தினோம். அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பொருளாளர் சுகாவும், வரவேற்று பேசிய நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமாரும் இப்போது கட்சியில் இல்லை.  இத்தனைக்கும் சுகா கமலுக்கு நீண்டகால நண்பர். தூத்துக்குடியில் சேகர் என்ற பொறுப்பாளர் விலகிவிட்டார். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் விலகிவிட்டார்கள். கட்சி நடவடிக்கை பிடிக்காமல்,  கமல் கூடாரமே காலியாகிக் கொண்டிருக்கிறது. 

 

m


தென்மாவட்டங்கள் என்று சொல்லப்படும் எட்டு மாவட்டங்கள் சேர்ந்து 65 லட்ச ரூபாய் செலவழித்து பாளையங்கோட்டையில் கூட்டம் நடத்தினோம். அன்றைக்கு எங்களை மேடையேற்றி இருக்க வேண்டாமா? அட, மேடையில் எங்கள் பெயரைக் கூட கமல் சொல்லவில்லை. கூட்டம் முடிந்ததும், இரவு 12 மணிக்கு ஒரு விஐபிகூட டின்னர் சாப்பிட்டார் கமல். எங்களில் யாரையும் கூப்பிடவில்லை. நாங்களெல்லாம் கூட்டம் நடந்த இடத்தில், திறந்தவெளியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அவரோ, ஒரு பெரிய ஹோட்டலில் அந்த விஐபிக்கு முக்கியத்துவம் தந்து, அவரோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பணம் போனது பெரிதல்ல. மரியாதையும் இல்லையென்றால்? நாங்களெல்லாம் கிறுக்கனுங்களா?” என்றவர், தொடர்ந்து பேசமுடியாமல் அழுதேவிட்டார்.   


‘மனிதன் உணர்ந்துகொள்ள இது மனித அரசியல் அல்ல! அதையும் தாண்டி புனிதமானது!’ என்று கமல்ஹாசன் பாடுவாரோ என்னவோ?
 

சார்ந்த செய்திகள்