Skip to main content

ராஜாமணி தங்கபாண்டியனின் உடலுக்கு மு.க.அழகிரி, உதயநிதி, நக்கீரன் ஆசிரியர், ரவீந்திரநாத் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேரில் அஞ்சலி!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

 


அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார், மறைந்த ராஜாமணி தங்கபாண்டியனின் உடலுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்துடன் நேரில் வந்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

 

அதேபோல, தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதியும் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தாயாரும், முத்தமிழறிஞர் கலைஞரின் நெருங்கிய நண்பரான தங்கபாண்டியன் அவர்கள் துணைவியுமான ராஜாமணி அம்மையார் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். அம்மையாரைப் பிரிந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தி.மு.க.வின் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். 

 

Rajamani Thangapandian's passes away


இந்நிகழ்ச்சியில், விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மதுரை மாநகரப் பொறுப்பாளர் தளபதி, மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், எம்.எல்.ஏக்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், முன்னாள் மதுரை மேயர் குழந்தைவேலு, நக்கீரன் ஆசிரியர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.  

தி.மு.க.வினரும் கிராம பொதுமக்களும் தங்கம் தென்னரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயார் ராஜாமணி அம்மாள் உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தற்போது, கணவர் தங்கபாண்டியன் சமாதிக்கு அருகிலேயே, ராஜாமணி அம்மாளின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஊடகவியலாளர் பலி! 

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
The journalist Incident in the scorching heat

ஊடகவியலாளர்கள் வெயில், மழை, இரவு, பகல் பார்த்து பணி செய்வதில்லை. உலகம் முழுவதும் இராணுவ மோதலின்போது செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உயிரைவிட்ட ஊடகவியலாளர்கள் அனேகம்பேர். இந்தியாவிலும் செய்திப் பணிக்காகக் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் பட்டியல் பெரிது. ஆக, உயிரையும் பணயம் வைத்துச் செய்தி சேகரிப்பது, ஒரு சமூகத் தொண்டாகவே கருதப்படுகிறது. 

மே 1ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் டி.கடம்பன்குளம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியில் வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதில் 3 பேர் பலியானார்கள். விதிமீறலாக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகளைத் தகர்க்க வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிர்களைக் காவு வாங்கிய கல்குவாரி வெடி விபத்து குறித்து செய்தி சேகரிப்பதற்காக, கடந்த 2 நாட்களாக ஊடகவியலாளர்கள், அங்கே கதியாய்க் கிடந்தனர். 

ஆய்வு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும்போதெல்லாம், அவர்களைப் பின்தொடர்ந்து தகவல்களைச் சேகரித்தனர். செடியோ, மரமோ இல்லாத பொட்டல் காடாக அந்தக் கல்குவாரி பகுதி இருந்ததால், ஒதுங்கக்கூட நிழலின்றி ஊடகவியலாளர்கள் தவித்தனர். மே 1ஆம் தேதி போலவே, 2ஆம் தேதியும் சதத்தை தாண்டி 106 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சுள்ளென்று வெயில் சுட்டெரித்தது. மற்ற செய்தியாளர்களுடன், அருப்புக்கோட்டை சன் நியூஸ் செய்தியாளர் ராஜா சங்கரும், வெயிலின் கடும் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக தலையில் கைக்குட்டையைக் கட்டியவாறு, அங்கு நடப்பதை வீடியோ எடுத்தார். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வெயிலில் காய்ந்ததால் மிகவும் சோர்வு ஏற்பட, கைக்குட்டையை நனைத்து முகத்தைத் துடைத்தபடியே இருந்தார். அங்கு பணியை முடித்துவிட்டுக் கிளம்பியபோது மிகவும் துவண்டுபோய் இருந்தார். 

The journalist Incident in the scorching heat

அதனால், சக செய்தியாளர்களுடன் சாப்பிடக்கூட போகாமல், பேருந்தில் அருப்புக்கோட்டைக்கு விரைந்தார். அங்குள்ள அலுவலகத்துக்குச் சென்றவுடன் வாந்தி வர, அருகிலிருந்த மருந்தகத்தைத் தொடர்புகொண்டு, உதவிக்கு அழைத்திருக்கிறார். ‘இதற்கெல்லாம் நாங்க வரமுடியாது, டாக்டரிடம்தான் செல்லவேண்டும்’ என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். உடல்நிலை மோசமாக, அங்கேயே சுருண்டு விழுந்திருக்கிறார். ஆம்புலன்ஸ் வந்து அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்குத் தூக்கிச் சென்றது. அங்கிருந்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ராஜா சங்கர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். 

மே 3ஆம் தேதி, உடற்கூராய்வு நடந்த அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், ராஜா சங்கரின் உடலைப் பெறுவதற்காக உறவினர்களும், இறுதி மரியாதை செலுத்துவதற்காகப் பத்திரிக்கையாளர்களும் மிகவும் சோகத்துடன் காத்திருந்தனர். உடற்கூராய்வு முடிந்து உடலை ஸ்ட்ரெச்சரில் வெளியே எடுத்துவந்தபோது, “ராஜா.. எங்கள விட்டுட்டு போயிட்டியே!” என்று கதறி அழுதனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள தனது குடும்பத்தை, குறிப்பாக திருமணமாகாத சகோதரிகளைப் பராமரித்து வருவதற்காகவே, 42 வயதாகியும் தனக்கென்று மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ளாதவராக இருந்தார் ராஜா சங்கர்.  

Next Story

நள்ளிரவில் வீட்டு வாசலில் ரத்தம்; பீதியில் மக்கள்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

People in panic on the door in the middle of the night in virudhunagar

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட உச்சிக்கோவில் பகுதியில் 4வது தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் (06-11-23) இரவு வழக்கத்திற்கு மாறாக இந்த தெருவில் வசித்த வரும் மக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு தூங்கச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வாசல் தெளிப்பதற்காக பெண்கள் எழுந்து வந்து வீட்டில் வாசலைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 

இந்த தெருவில் இருக்கும் பெரும்பாலான வீட்டின் வாசல்களில் ஆங்காங்கே ரத்தத் துளிகள் சிதறிக் கிடந்தன. இதையடுத்து, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களிலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரு வீட்டில் ‘பி.ஆர். இன்று இரவு’ என்று ரத்தத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனால், பீதியடைந்த அப்பகுதி மக்கள் ஒரு இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். 

 

தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து, அங்கு இருந்த ரத்த துளிகளை எடுத்து அது மனித ரத்தமா? அல்லது ஆட்டு ரத்தமா? என்பதைக் கண்டறிய பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும், இது குறித்து காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரித்ததில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு 5வது தெருவில் இதுபோல் வீட்டு வாசலில் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர். வீட்டு வாசலில் ரத்தம் தெளிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.