
பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட நேற்று அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுவதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை ராயப்பேட்டை, அண்ணா சாலை, திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு மழையானது பொழிந்து வருகிறது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தின் 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.