




தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வாக்கில் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து, சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல், பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும், வெள்ள நீர் புகுந்து மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை கொரட்டூர் கிழக்கு நிழற் சாலையில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ. மருந்தகம் அலுவலகத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அலுவலகத்தின் வாசற் கதவின் அருகில் நின்று நோயாளிகளுக்கு மருந்து அளித்து வருகின்றனர். இந்த இ.எஸ்.ஐ. மருந்தக கட்டடம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில், அங்கு வேலை பார்ப்பவர்கள் மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளனர்.
கடந்த 25 வருடங்களாக இயங்கி வரும் இந்த மருந்தகம், மழைக் காலங்களில் இப்படித்தான் குளம் போல் காட்சியளிக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தாங்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இனியாவது மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நோயாளிகள் சிரமமடையாத வகையில் சரி செய்ய வேண்டும் என கோரிக்கையும் வைக்கின்றனர்.