Skip to main content

ஆர்ப்பரிக்கும் வெள்ளம்... அலட்சியம் காட்டும் சிறுவர்கள்!

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு ஒரு லட்சத்து 50  ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்பொழுது வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து  60 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.70 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒலிபெருக்கி மூலமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரை பகுதிகளான அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, பவானி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், கந்தன் பட்டறை, காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளை காலி செய்து கொண்டு உடைமைகளைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.

 

இந்நிலையில் குமாரபாளையம் காவிரி ஆற்றில் கலைமகள் வீதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிறிதும் ஆபத்தை உணராமல் ஆற்றில் குதித்து நீச்சலடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்