
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி சின்னப்பொட்டு (வயது 70). தனது மகன் அண்ணாதுரையுடன் வசித்துவருகிறார். கடந்த 13ஆம் தேதி மகனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோபமாக சின்னப்பொட்டு, வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். தாயை காணவில்லை என அண்ணாதுரை மற்றும் உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர். உறவினர் வீடுகளுக்கும் செல்லவில்லை. அதனால் தொடர்ந்து தேடிவந்துள்ளனர். ஆனால் மூதாட்டி சின்னப்பொட்டு நடந்தே மேற்பனைக்காடு பகுதிக்கு சென்றுள்ளார்.
நேற்று காலை மேற்பனைக்காடு கல்லணைக் கால்வாய் பகுதிக்கு சென்ற மூதாட்டி, தனது கைகளை சேலையால் சுற்றிக் கட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் ஆற்றில் குதித்துள்ளார். இந்த நிலையில் 2 கி.மீ தூரம் வரை தண்ணீரில் மிதந்தபடியே சென்றுள்ளார். அப்போது நெய்வத்தளி கிராமத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மூதாட்டி மிதந்து வருவதைப் பார்த்து அவரை மீட்டு கரைக்கு கொண்டுவந்து பார்த்தபோது உயிர் இருந்தது தெரியவந்தது.
உடனே அங்கு நின்ற பெண்கள் மாற்று உடைகள் கொடுத்து மூதாட்டிக்கு உடுத்தச் சொல்லி உணவு கொடுத்து பின் விசாரிக்கும்போது மகன் மீது கோபமாக வீட்டைவிட்டு வெளியே வந்து தற்கொலை செய்துகொள்ள ஆற்றில் குதித்ததாக கூறியுள்ளார். இது குறித்து இளைஞர்கள் கீரமங்கலம் போலீசாருக்கும் மூதாட்டியின் மகன் அண்ணாதுரைக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த மூதாட்டியின் உறவினர்களிடம் அவரை ஒப்படைத்தனர். பெரும்பாலன இளைஞர்கள், எங்காவது ஒரு விபத்து நடந்தால் அதனை தங்களது கைபேசியில் வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு பகீரும் பழக்கம் உடையவர்கள் மத்தியில் இந்த இரண்டு இளைஞர்கள் களத்தில் இறங்கி காப்பாற்றியுள்ளனர் என அக்கிராம மக்கள் பாராட்டினார்கள்.