புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் கருக்காகுறிச்சி ராஜா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சௌமியா (வயது 21). புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி 3ஆம் ஆண்டு நர்சிங் மாணவியான இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த 25ஆம் தேதி திடீரென காணாமல் போனார். 27ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து சௌமியாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதே சமயம் சௌமியாவை சிலர் கடத்தி கொலை செய்து கிணற்றில் வீசியிருக்க வேண்டும். எனவே இந்த கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று சௌமியாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அதோடு இன்னும் சடலத்தை வாங்கவில்லை. மேலும், சௌமியாவின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் நீதிமன்றம் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சௌமியாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பல குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், கடந்த ஒரு மாதமாக சௌமியாவுடன் பேசியுள்ள நபர்களின் செல்போன் எண்களைச் சேகரித்து விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.
அதில் சௌமியாவின் நண்பர்கள், தோழிகளின் எண்களும் உள்ளது. அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தற்போது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் விருப்பமில்லை என்று சௌமியா கூறியதாகக் கூறியுள்ளனர். இந்த நிலையில் சௌமியா அடிக்கடி பேசியுள்ள கருக்காகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை இன்று (31.12.2024) வடகாடு காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் ஆலங்குடி டி.எஸ்.பி. கலையரசன் நீண்ட நேரம் விசாரணை செய்துள்ளார். அதில் சௌமியா கடந்த அக்டோபர் மாதம், அதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டு மயங்கி ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சிகிச்சை அளித்து ஒரு மணி நேரம் கவுன்சலிங் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இதனைப் பதிவு செய்து கொண்ட போலீசார் அடுத்தகட்டமாக மேலும் சிலரை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதில் சௌமியாவுக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள சிங்கப்பூரில் உள்ள இளைஞரிடமும் விசாரணை செய்யப்பட உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் முழுமையாக விசாரணை செய்த பிறகே சௌமியாவின் மரணத்திற்கு உண்மையான காரணம் தெரியவரும் என்கின்றனர்.