Skip to main content

இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப்பொருள் பறிமுதல்; போலீசார் அதிரடி

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

pudukkottai thanjaore police action taken by secret information

 

தஞ்சாவூர் மாவட்டப் பகுதியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் வழியாக  போதைப்பொருள் பண்டல்கள் கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு கடத்த உள்ளதாக தஞ்சை மாவட்ட போலீசார் புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டேயின் தனிப்படை, எஸ்.ஐ பாலமுருகன் தலைமையிலான போலீசார் இன்று காலை கோட்டைப்பட்டினத்தில் சோதனை செய்த நிலையில் அங்கிருந்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தஞ்சை மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை எல்லை கிராமமான புளிச்சங்காடு கைகாட்டி வழியாக ஒரு பைக்கில் போதைப்பொருள் பண்டல்கள் கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

 

இதன் மூலம் உஷாரான தனிப்படை போலீசார் புளிச்சங்காடு கைகாட்டி விரைந்து வந்து அந்த வழியாக பைக்கில் மூட்டையுடன் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குபின் முரனாக பதில் சொன்னதால் அவர்களிடம் இருந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் போதைப்பொருள் பண்டல் பண்டலாக இருந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த போதைப்பொருள் பண்டல்கள், பைக் ஆகியவற்றை கைப்பற்றி ஆலங்குடி மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனமல்லி இருவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கோட்டைப்பட்டினம் வடக்குத் தெரு சாகுல்ஹமீது மகன் ராஜ்முகமது (33), ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த நல்லதம்பி மகன் நாகேந்திரகுமார் (57) என்பது தெரிய வந்தது. மேலும் இந்த கஞ்சா பண்டல்கள் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்ததாக கூறியுள்ளனர். இதில் நாகேந்திரகுமார் ஏற்கனவே இலங்கைக்கு பொருட்கள் கடத்திய வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்