எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் விசாரணை நடத்த காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். அப்பொழுது அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்துகள் குறித்த பல்வேறு விவரங்களை மறைத்ததாகவும் தவறான தகவல்களை கொடுத்ததாகவும், இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், புகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். 'தமக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கூடாது' என எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'எடப்பாடி பழனிசாமி புகார் மீது எந்தவிதமான விசாரணையும் நடத்தக் கூடாது' என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த உத்தரவை மீறி சேலம் மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட சேலம் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி, உதவி ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்று மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்டு நீதிபதி இளந்திரையன், 'எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் மேற்கொண்டு எந்த விசாரணை நடத்தக் கூடாது. இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை விசாரணைக்கு தடை விதிப்பதாகவும்' உத்தரவிட்டு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.