Skip to main content

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விலை ஏறுகிறது... விவசாயிகளுக்கு விலை குறைகிறது... மஞ்சள் விவசாயிகள் வேதனை!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

Prices are going up for corporate companies ...! Farmers' product prices fall ...! Turmeric farmers suffer


ஈரோடு என்றால் ஜவுளிக்கு அடுத்தபடியாக 'மஞ்சள்' பிரதானமானது. மஞ்சள் மாநகரமாக திகழும் ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பெரும்பாலும் மஞ்சள் பயிரை அதிகமாக சாகுபடி செய்து வருகிறார்கள். குறிப்பாக காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதியில், ஆண்டுக்கு தொடர்ந்து 10 மாதங்கள் தண்ணீர் திறக்கப்படுவதால், அந்தப் பகுதிகளில் மஞ்சள் சாகுபடி அதிகமாகச் செய்யப்படுகிறது. மேலும் புவிசார் குறியீடு பெற்றுள்ளதும், ஈரோடு மஞ்சள் தரமாக இருப்பதாலும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பலர் ஈரோடு மார்கெட் வந்து  மஞ்சளை அதிகமாகக் கொள்முதல் செய்து வந்தனர்.

பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம், ஈரோடு செம்மாம்பாளையம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய இடங்களில் மஞ்சள் ஏலம் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த மார்க்கெட்டுகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மஞ்சளின் விலை குறைவாகவே காணப்பட்டது. ஒரு குவிண்டால் சுமார் ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மஞ்சளின் விலை குறைவாக இருந்ததால் விவசாயிகள் தங்களது மஞ்சளை விற்பனைக்காக கொண்டு செல்வதில் தயக்கம் காட்டிவந்தனர்.


கரோனா பாதிப்பு காரணமாக சில நாட்கள் மஞ்சள் ஏலம் நடக்காமல் இருந்துவந்தது. கிருமி நாசினியாக மஞ்சள் இருப்பதால், கரோனா பாதிப்புக்கு பிறகு, மஞ்சளின் விற்பனை சூடுபிடிக்கும் என்றும், அதனால் விலையில் ஏற்றம் ஏற்படும் என்றும் விவசாயிகள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாகக் கடந்த சில நாட்களாக மஞ்சளின் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துவருவது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தொடர்ந்து விலை குறைந்துகொண்டே வந்ததால் விவசாயிகள் மஞ்சளை ஏலத்துக்கு கொண்டு வருவதையும் தவிர்த்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூட மார்க்கெட்டுக்கு 1,000 மூட்டை மஞ்சள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது மஞ்சளின் வரத்து மிகவும் குறைந்துவிட்டது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஏலத்துக்கு 489 மூட்டை மஞ்சள் கொண்டு வரப்பட்டது. இதில் 395 மூட்டைகள் விற்பனையானது. மேலும், ஒரு குவிண்டால் தனி விரலி மஞ்சள் ரூ.5,056 முதல் ரூ.5,959 வரையும், தனி கிழங்கு மஞ்சள் ரூ.4,961 முதல் ரூ.5,966 வரையும் விலைபோனது. மஞ்சளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயக் குடும்பங்கள் பெரும் கவலை அடைந்துள்ளது.

 

இதுகுறித்து மஞ்சள் விவசாயிகள் சிலர் கூறும்போது, "கரோனா பாதிப்பு காரணமாக திருவிழாக்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடக்காமல் உள்ளது. இதனால் மஞ்சளின் தேவையும் குறைந்து இருக்கலாம். மேலும், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் அனுப்பி வைக்கப்பட்டுவந்தது. ஆனால், இலங்கையில் வெளிநாட்டில் இருந்து மஞ்சள் கொள்முதல் செய்யத் திடீர் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 

அங்கு கொண்டு செல்லப்படும் மஞ்சளை சோதனைச் சாவடி அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்கிறார்கள். ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து, அந்த மாநில அரசு சார்பில் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.6,800க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த மஞ்சள் தற்போது ஏலம் முறையில் அந்த அரசு விற்பனை செய்கிறது. இதில் ஒரு குவிண்டாலுக்கு மார்க்கெட் விலையில் ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை விற்கப்படுகிறது. 

 

Ad


இந்த மஞ்சளை மற்ற மாநில வியாபாரிகள் வாங்குவதால் ஈரோடு மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தீபாவளி பண்டிகையின்போது நுகர்வு அதிகரித்தால் மஞ்சளின் விற்பனையும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறோம். அவசரப் பண உதவி தேவைப்படும் விவசாயிகள் மட்டும், மஞ்சளை விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். விலை கிடைக்கும் நம்பிக்கையில் மஞ்சளை விவசாயிகள் பாதுகாத்து வருகிறார்கள்.

 

இதனால் தரமான மஞ்சள் விற்பனைக்கு வரும்போது, விலையும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் எங்களுக்குள்ள சந்தேகம் சர்வதேச வணிகமாக உள்ள தங்கம், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் விலையேற்றம் இருந்து கொண்டே இருக்கும் போது உணவு மற்றும் மருத்துவப் பொருளான மஞ்சள் மட்டும் எப்படி விலை குறைகிறது ? கார்பரேட் கம்பெனிகளின் பொருட்கள் விலை ஏறுகிறது. உழைப்பின் மூலம் விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு மட்டும் உரிய விலை கிடைப்பதில்லை." என வேதனையுடன் கூறுகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உச்சத்தை நோக்கி மஞ்சள் விலை; விவசாயிகள் மகிழ்ச்சி...!

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

nn

 

ஈரோட்டில் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படும் நிலையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மாவட்டத்தில் 4 இடங்களில் உள்ள ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைக் கூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைக் கூடம்,  என மஞ்சள் ஏலம் நடக்கும்.

 

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரத்து 500க்கு விற்பனையாகி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மஞ்சள் குவிண்டால் புதிய உச்சத்தைத் தொட்டது. ஈரோடு மஞ்சளுக்கு மவுசு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம். இதனால் ஈரோடு மஞ்சளை வெளிமாநில வியாபாரிகள் போட்டிப் போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

 

நேற்று ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் 2,049 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். இதில் விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.14,569க்கு விற்றது. ஒரு வாரத்தில் மட்டும் மஞ்சள் குவிண்டால் ரூ.4,399 வரை உயர்ந்துள்ளது. மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ. 15 ஆயிரத்தை நெருங்கியது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

 

 

Next Story

கரன்சி மற்றும் தங்கம் பண்டமாற்றுக்காக இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்! 

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

thoothukudi district police raid sri lanka tamilnadu boats turmeric

 

தமிழகத்தின் முக்கிய விளைபொருளான மஞ்சளை, மூட்டை மூட்டையாகக் கொள்முதல் செய்யப்பட்டு அதனைத் தூத்துக்குடி கடல் மார்க்கமாக படகு மூலம் இலங்கைக்குக் கடத்தப்படுவது அண்மை நாட்களில் சகஜமாகிவிட்டது.

 

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் தூத்துக்குடிப் பகுதிகளில் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 12 டன் விரளி மஞ்சள் மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வல்லங்கள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட 12 டன் மஞ்சள் இந்திய மதிப்பில் 26 லட்சம் மதிப்புள்ளது என்று சொல்லப்பட்டாலும், அதன் இலங்கை மதிப்பு அந்நாட்டுக் கரன்சியில் ஒரு கோடியையும் தாண்டும். குறிப்பாக இங்கே 120 ரூபாய்க்கு விற்கப்படும் மஞ்சளின் இலங்கை விலை மூவாயிரம். அதன் இந்தியக் கரன்சி மதிப்பு ஆயிரத்து ஐநூறு ரூபாய். அதனையே முறையாக இலங்கைக்கு அனுப்பினால் 120 ரூபாய் விலையான மஞ்சளுக்கு ஒன்றரை மடங்கு சுங்கத் தீர்வை என்பதால் அதனை ஏய்க்கும் வகையிலும், இலங்கையில் தேவை அதிகம் என்பதால் அதனைப் பயன்படுத்தி தங்கம் உள்ளிட்ட பண்ட மாற்றுக்காகவும் மஞ்சள் கடத்தப்படுகின்றன என்கின்றனர் காவல்துறையைச் சேர்ந்த மரைன் பிரிவு போலீசார்.

thoothukudi district police raid sri lanka tamilnadu boats turmeric

 

இதனிடையே நேற்று முன்தினம் (03/01/2021) தூத்துக்குடி வடபாகம் போலீசார் திரேஸ்புரம் கடற்கரைப் பக்கம் ரோந்து சென்றிருக்கிறார்கள். அது சமயம் அங்குள்ள படகு ஒன்றில் சிலர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தவர்கள், போலீசாரைக் கண்டதும் தப்பியோடியுள்ளனர். அதனைச் சோதனையிட்டதில் 30 மூடைகளில் மஞ்சள் சிக்கியுள்ளது, அதன் எடை 1,200 கிலோ, இந்திய மதிப்பில் 2 லட்சம். தூத்துக்குடிப் பகுதிகளில் பதுக்கி வைத்து இலங்கைக்குக் கடத்தப்பட முயன்றது தெரியவர, வடபாகம் போலீசார் அதனைக் கைப்பற்றியதுடன் தப்பியவர்களைத் தேடி வருகின்றனர். மேலும் இந்தக் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்கிற விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது.

thoothukudi district police raid sri lanka tamilnadu boats turmeric

 

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார் கூறுகையில், "தரையில் கடத்தப்படுகிறபோது தடுத்து கைப்பற்றிவிடுகிறோம். ஆனால் அவை படகுகள் மூலம் நடுக்கடலில் கைமாறி இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன. செயின் தொடர்பு போன்று செயல்படுகின்றனர். கடலில் நடப்பதை அதன் தடுப்பு காவல் படையினரின்  பொறுப்பில் வருகிறது" என்றார்.

 

தமிழக வேளாண் பொருள் இலங்கையில் தங்கமாகிறது.