Skip to main content

குளங்கள் நிரம்பியது... முயற்சித்த இளைஞர்களின் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்தது! 

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை, வரத்து வாய்க்கால் என்று நீர்நிலைகள் பல ஆண்டுகுளாக சீரமைக்க தவறவிட்டதால் மழைத் தண்ணீரை சேமிக்க முடியாமல் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே சென்றுவிட்டது. மற்றொரு பக்கம் தண்ணீரை சேமித்து வைக்கும் ஆற்று மணலை கொள்ளைக் கும்பல் பங்குபோட்டு அள்ளிவிட்டதாலும் இன்று குடிதண்ணீருக்கு குடங்களை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுவிட்டது.

 

 The pools are filled


இந்தநிலையில்தான் வெளிநாடு, வெளியூர்களுக்கு வேலைக்காகவும், தொழில் செய்யவும் சென்ற இளைஞர்கள், சொந்த ஊர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தார்கள். சொந்த ஊரில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து மீண்டும் நிலத்தடி நீரை மீட்போம் என்று சபதம் எடுத்தனர். பலர் தங்கள் வேலைகளை உதறிவிட்டு சொந்த ஊருக்கு வந்தார்கள். சிலர் பணி செய்யும் இடத்தில் இருந்தே நீர்நிலை சீரமைப்பு பணிகளை தொடர்ந்தனர்.

 

 The pools are filled

 

தஞ்சை மாவட்டம் களத்தூர் கிராமத்தில் உயிர் துளியாக தொடங்கிய நீர்நிலை மீட்பு பணி அடுத்து ஒவ்வொரு கிராமமாக பரவியது. கைஃபா என்ற அமைப்பு உருவாகி 560 ஏக்கர் பரப்பளவுள்ள பேராவூரணி பெரிய குளத்தை மீட்டார்கள். தண்ணீரை நிறைத்தார்கள். ஒட்டங்காட்டில் கலாம் நற்பணி மன்றத்தினர் பெரிய குளத்தை மீட்டார்கள். கொத்தமங்கலத்தில் இளைஞர் மன்றத்தினர் பல குளங்களை மீட்டனர்.

ஏம்பல் கிராமத்தில் முன்னாள் அரசு பள்ளி மாணவர்கள் சங்கம் உருவாகி பல்வேறு தடைகளைத் தாண்டி இதுவரை 8 குளங்களையும் அதற்கான வரத்து வாய்க்கால்களையும் மீட்டதுடன் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். சீரமைக்கப்பட்ட குளங்களில் தண்ணீர் நிரம்புவதைப் பார்த்து ஆனந்தமடைந்து அடுத்தடுத்த குளங்களையும் சீரமைக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ளனர்.

 

 The pools are filled

 

பசுமையான விவசாய கிராமமான மறமடக்கியில் பல வருடங்களாக நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே சென்றதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மாற்று வேலைகளுக்கு செல்லத் தொடங்கினார்கள். இந்தநிலையை பார்த்த இளைஞர்கள் மக்கள் செயல் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி தங்கள் பங்களிப்போடு உதவி செய்ய முன் வந்தவர்களின் உதவிகளையும் பெற்று தூர்வாரத் தொடங்கினார்கள். 27 நாட்கள் கடும் உழைப்பிற்கு பிறகு பெய்த மழையில் குளம் பாதி நிறைந்ததைப் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். இதைப் பார்க்கும் போது மற்ற குளங்களையும் சீரமைத்து விரைவில் வறட்சியில்லாத கிராமமாக மறமடக்கியை மீட்போம் என்கிறார்கள் இளைஞர்கள்.

இந்த வரிசையில் நெடுவாசல், மாங்காடு, வடகாடு, செரியலூா், குருவிக்கரம்பை, நாடியம், மருங்கப்பள்ளம் என்று கிராமங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. சீரமைக்கப்படும் நீர்நிலைகளில் பறவைகளுக்காக அடர்வனங்களும், கரைகளையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க பனை விதைகளையும் புதைத்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்