World Bank Managing Director meeting with the Prime Minister

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருடன் இன்று (23.02.2024) சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு அரசின் சார்பில் தாம்பரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிபுரியும் பெண்களுக்கான குறைந்த வாடகையில், தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதி திட்டமான தோழி விடுதியை பார்வையிட்டதாக கூறினார். மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு தனது பாராட்டினை தெரிவித்தார். அதோடு இத்திட்டம் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியான திட்டமாகும் என்று தெரிவித்தார்.

Advertisment

இச்சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் வேளாண் கடன் திட்டத்திற்கு 1971 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டிற்கும் உலக வங்கிக்கும் நீண்டகால உறவு இருப்பது குறித்து பேசினார். 1971 ஆம் ஆண்டிலிருந்து மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை அடையவும் உலக வங்கி பல வெற்றிகரமான ஒத்துழைப்புகளை அளித்துள்ளது. தற்போது, உலக வங்கி நிதியுதவியுடன் நடைமுறையுள்ள 8 திட்டங்கள் குறித்தும், மேலும் ஆலோசனை நடைபெற்றுவரும் 3 திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

Advertisment

இந்த அனைத்துத் திட்டங்களுக்கும் உலக வங்கியின் ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர்களது தமிழ்நாட்டுப் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இச்சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் எனப் பலரும் உடன் இருந்தனர்.