Skip to main content

தப்பிக்கப் பார்க்கிறார்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள்! 

Published on 13/06/2018 | Edited on 13/06/2018
gg

 

ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தூத்துக்குடி நகர மக்கள் பேரணியாய் சென்றதில் கலெக்டர் அலுவலக வளாகமருகே தடியடி கண்ணீர் புகை வீச்சு என்றாகி கலவரம் ஏற்பட்டதில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 13 பேர்கள் பலியானார்கள். பலர் காயமுற்றனர்.

 

கலவரத்தை ஒடுக்க போலீஸ் பின்பற்ற வேண்டிய சட்டமரபுகளைக் கடைபிடிக்கவில்லை என அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர்களின் உரவினர்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த சி.பி.எம்.மின் தேசிய செயலாளரான சீத்தாராம் யெச்சூரி, கலவரத்தை ஒடுக்குவதற்கு போலீசார் முறையான வழிகளைப் பின்பற்றவில்லை. மக்களை சுடவேண்டும் என்ற நோக்கத்திலேயே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டுப் போனார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமளவுக்கு நிலைமை போகும் பட்சத்தில் அது சமயம், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் உள்ளன.

 

சட்டம் சார்ந்தவர்கள் அதுபற்றி விரிவாகவே சொல்வது...

போராடும் மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் யார், என்கிற கேள்வி தற்போது விஸ்வரூபமெடுப்பதால் அதைச் சமாளிப்பதற்கு, அதற்கு உத்தரவிட்டவர்கள் போலீஸ் அதிகாரிகள் அல்ல. வருவாய் துறையைச் சேர்ந்த சேகர், கண்ணன், சந்திரன் போன்ற மூன்று துணை வட்டாட்சியர்கள், எப்.ஐ.ஆரிலேயே அது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகிற வகையில், சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பின்னர், போலீசே எப்.ஐ.ஆர் நகல்களை வெளிப்படுத்தியிருப்பது அதிர்ச்சியையும் சர்ச்சையையும் கிளப்பியிருக்கிறது.

அது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல. நடைமுறை மரபுகள். இந்த நடைமுறை மரபுகளின் மூலமாகத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

 

gun

 

ஒரு காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியின் ஒரு வீட்டில் பிணம் கிடந்தால், அது பற்றிய புகார் வராத நிலையில் அந்தப் பகுதியின் வி.ஏ.ஓ விற்குப் போலீஸ் தகவல் கொடுக்கும். ஸ்பாட்டை பார்வையிட்ட வி.ஏ.ஓ.அதற்கான புகார் கொடுப்பார். அந்த அடிப்படையில் வி.ஏ.ஓ.வின் பெயரால் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும். அடுத்து, ஒரு இடத்தில் கூடுகிற மக்கள் கூட்டத்தின் போக்கு, திசை மாறுமானால், கலைப்பதற்கு போலீஸ் அதிகாரிகளே துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிடக் கூடாது. அப்படிச் செய்தால் அது பழிவாங்கும் நோக்கமாகி விடும். அதனால் ஸ்பாட்டில் கூட்டத்தினரிடம் பேசிச் சமாளிப்பதற்கு வருவாய் துறை அதிகாரியான தாசில்தார் தான் ஈடுபட வேண்டும். அது முடியாமல் போனால், அவர்தான் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தர விட வேண்டும். இவைகளே பிரிட்டிஷ் ஆட்சியில் சட்ட நடைமுறையாகக் கொண்டு வரப்பட்டு காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிற நடைமுறை மரபுகள். தாசில்தாரின் ஒப்புதலின்படி எப்.ஐ.ஆரில் அவரது பெயர் பதிவாகும். போலீஸ் அதிகாரிகளே துப்பாக்கிச் சூட்டிற்கு உத்திரவிட்டாலும், அவர் பெயரால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யமாட்டார்கள். செய்யக்கூடாது. ஆனால் தேசத்தில் நடக்கிற பல் வேறு துப்பாக்கிச் சூடுகளுக்கு போலீஸ் அதிகாரிகளே அன் அக்கவுண்ட்டாக உத்தரவிட்டு, சம்பவத்திற்குப் பின்பு, அந்தச் சரக துணை வட்டாட்சியரிடம் துப்பாக்கிச் சூட்டிற்கான ஒப்புதலை போலீசார் வாங்கிவிடுவார்கள். அவரும் ஒப்புதல் கொடுக்கக் கடமைப்பட்டவர் என்பதால் மறுக்காமல் கொடுத்து விடுவார். தாசில்தாரின் உத்தரவுப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுவிடும். காரணமான அதிகாரிகள் இப்படித் தப்பிவிடுவார்கள்.

இதற்கும் சில நடைமுறைகள் உள்ளன.

கட்டுப்படாத கூட்டம் கூடுகிற போது ஸ்பாட்டில் கலெக்டர், டி.ஆர்.ஓ அல்லது ஆர்.டி.ஓ போன்ற உயரதிகாரிகள் இருக்க வேண்டும். வேலைப் பளுகாரணமாக இந்த உயரதிகாரிகள் வரமுடியாமல் போகலாம். எனவே வட்டாட்சியர், ஆர்.ஐ., வி.ஏ.ஓ.தலையாரி உள்ளிட்ட நான்கு பேர்கள் ஸ்பாட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். போலீஸ் அவர்களைக் கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும் என்பது சட்டவிதி. அந்தக் கூட்டத்தைக் கலைக்க முதலில் அவர்களிடம் சமாதானமாகப் பேச்சு வார்த்தை நடத்துவார் வட்டாட்சியர், அது முடியாமல் போகும் பட்சத்தில்,

நீங்கள் சட்டவிரோதமாகக் கூடியுள்ளீர்கள். கலைந்து செல்லுங்கள். இல்லையேல் துப்பாக்கிச் சூடு நடத்திக் கலைக்க வேண்டி வரும் என்று போராட்டக்காரர்களுக்கு கேட்கிற வகையில் தாசில்தார் லவுட் ஸ்பீக்கரில் பேச வேண்டும். அதற்கும் கூட்டம் கலையாவிட்டால் அவரே துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிடுவார். பிரிட்டிஷ் ஆட்சியின் சட்ட விதி இதுதான் என்கிறார்கள் குற்ற ஆவணக் காப்பக அதிகாரிகள்.

 

ஸ்டெர்லைட்டை மூட வேன்டும் என்று மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமயம் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. அந்த இடத்தில் போலீசைத் தவிர வருவாய்த்துறை அதிகாரிகள் யாருமில்லை என்று போராட்டக்காரர்களே தெரிவித்திருக்கிறார்கள்.ஐ.ஜி.யான சைலேஷ்குமார் யாதவ் தான் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது என்று ஆரம்பம் முதல் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சட்டம் வகுத்த மரபுகள் பின்பற்றப்பட்டுள்ளனவா. மீறப்பட்டுள்ளனவா? என்பது தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு அல்லது சி.பி.ஐ.போன்ற சார்பற்ற விசாரணை அமைப்புகளால் மட்டுமே வெளிக் கொண்டு வர முடியும். என்பதையும் மறுப்பதற்கில்லை.
 

சார்ந்த செய்திகள்