டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர்களைப் போல் நடனமாடி மக்களைக் கவர்ந்தவர் டான்சர் ரமேஷ். 42 வயதான இவர் மூர் மார்க்கெட் பகுதியில் தனது முதல் மனைவியுடன் வசித்து வந்தார். இவரது இரண்டாம் மனைவியின் வீடு புளியந்தோப்பு கே.பி.பார்க் அருகே தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் கட்டடத்தில் உள்ளது.
நேற்று ரமேஷுக்கு பிறந்தநாள் என்பதால் தனது இரண்டாம் மனைவியை சந்திக்கச் சென்றுள்ளார். தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் 10 மாடிகள் கொண்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியிலிருந்து ரமேஷ் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரமேஷ் சமூக வலைத்தளம் தவிர தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர். இவரது தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் நேற்று பிறந்தநாள் என்பதால் ரமேஷ் தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியின் போது அவருக்கும் அவரது உறவினருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பின்பே ரமேஷ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ரமேஷினை தற்கொலைக்குத் தூண்டியது யார்? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது மனைவி தரப்பில் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் மனைவி தரப்பில் தனது கணவர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறினர். ரமேஷின் மரணம் குறித்து மர்மச்சாவு 174 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.