இரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்வது ஏன்? என்பது குறித்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.
நேற்றைய சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக தரப்பு பேசியபோது, தமிழகத்தில் பொதுவாக போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள் என்று சொன்னால் சிலரை கைது செய்யாமல் விடுவது உண்டு. சிலரை கைது செய்வது உண்டு. இன்னும் சிலரை இரவில் கைது செய்வதும் உண்டு.
திமுக தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 4 முறை போலீஸ் துறைக்கு அமைச்சராக இருந்தவர். நள்ளிரவில் வீடு புகுந்து கதவை உடைத்து அவரை கைது செய்த படலம் உண்டு. அது என்ன இரவு நேரத்தில் கைது செய்வது? வீடு இருக்கிறது, நிலம் இருக்கிறது. பிள்ளைகள் இருக்கிறார்கள். யாரும் எங்கும் ஓடிவிட மாட்டார்கள். ஏன் இரவு நேரத்தில் புகுந்து கைது செய்ய வேண்டும்.
பெரிய நிகழ்வுகளாக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம். கிராமத்தில் வாய்க்கால் வரப்பு தகாராறு, அண்ணன்- தம்பி தகராறு, ஒரு பெண்ணை அடுத்தவர் வீட்டு பையன் இழுத்துச் சென்ற தகராறு இதுபோல் பல்வேறு விஷயங்களில் இரவு நேரத்தில் தாய்- தந்தையரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கைது செய்கிறார்கள். இந்த நிலைமை தவிர்க்கப்பட வேண்டும். காவல்துறைக்கு தகுந்த வழிமுறையை சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியபோது,
காவல்துறையினர் இரவு நேரத்தில் சென்று கைது செய்வதாக சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்கள். உங்களுடைய ஆட்சி காலத்தில் நாங்கள் எல்லாம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பொழுது எங்களையும் கைது செய்திருக்கிறீர்கள்.
நானே 6 முறை கைது செய்யப்பட்டு இருக்கிறேன். பல்வேறு போராட்டங்களின் வாயிலாக கைது செய்யப்பட்டிருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உங்கள் ஆட்சியிலும் கைது செய்திருக்கிறீர்கள். ஆகவே அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு காவல் துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.