Skip to main content

அரசு ஊழியர் - ஆசிரியர்கள் போராட்டத்தை சிக்கலாக்கக் கூடாது: சுமூகத் தீர்வு தேவை! ராமதாஸ்

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
rs

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை :  ’’பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நடத்தி வரும் போராட்டம் இன்று ஆறாவது நாளாக நீடிக்கும் நிலையில், அதைத் தீர்ப்பதற்கு பதிலாக தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அரசு ஊழியர்களின் போராட்டம் நீடிப்பது எந்தத் தரப்புக்கும் நன்மை பயக்காது.

 

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக  கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயன் கிடைக்காத சூழலில் தான், வேறு வழியின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தின் விளைவுகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கி விட்டன. அரசு அலுவலகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. விரைவில் தேர்வுகள் தொடங்கப்படவிருக்கும் நிலையில், பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தான் அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்.

 

ஆனால், பேச்சுக்களுக்கு பதிலாக அடக்குமுறையை கையில் எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஆட்சியாளர்கள் முயல்வது ஆக்கப்பூர்வமான செயலாகத் தெரியவில்லை. போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்வது, 17-பி குறிப்பாணை வழங்குவது உள்ளிட்ட செயல்களில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இது வேலைநிறுத்தம் தீவிரமடையவும், சட்டம் - ஒழுங்கு சிக்கல் ஏற்படவும் வழி வகுக்குமே தவிர, வேறு எந்த வகையான பயனையும் ஏற்படுத்தாது.

 

ஆட்சியாளர்களும், அரசு ஊழியர்களும் வேறு வேறல்ல. அவர்கள் இருவருமே அரசு நிர்வாகத்தின் அங்கங்கள் தான். ஒரு தரப்பினர் கொள்கை வகுப்பாளர்கள் என்றால், மற்றொரு தரப்பினர் வகுக்கப்பட்ட கொள்கைகளை செயல்படுத்துபவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் தண்டவாளத்தைப் போன்று பயணிக்க வேண்டுமே தவிர, விலகவோ, நெருங்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் அது அரசாங்க எந்திரம் எனப்படும் தொடர்வண்டி கவிழ்வதற்கே வழிவகுக்கும் என்பதை இருவரும் உணர வேண்டும்.

 

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் நியாயமற்றது என்று எந்த இடத்திலும் ஆட்சியாளர்கள் கூறவில்லை. மாறாக, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி அரசிடம் இல்லை என்றும், நிதி நெருக்கடி காரணமாகவே கோரிக்கைகளை ஏற்க முடியவில்லை என்றும் தான் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும், மீண்டும் கூறி வருகிறார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதை ஆட்சியாளர்களே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுபவர்களை அரசு ஒடுக்குவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்?

 

உலகில் போர்களே பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படும் போது, போராட்டங்களைப் பேச்சுக்களின் மூலம் தீர்க்க முடியாதா என்ன? உலகில் பேச்சுக்களின் மூலம் தீர்க்கப்படாத சிக்கல் என்று எதுவுமே  இல்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் தங்களின் ஓய்வுக்குப் பிந்தைய காலத்திற்கான சமூகப் பாதுகாப்பு பறிக்கப்பட்டிருப்பதாக அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். அரசாங்கமோ, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தங்களிடம் பொருளாதாரம் இல்லை என்கிறது. இரு தரப்பினரும் திறந்த மனதுடன் அமர்ந்து பேசினால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு நிச்சயம் கிடைக்கும்.

 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் அப்பாவி பொதுமக்களும், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, இந்தப் போராட்டத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. அதன்படி, இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், வழங்கப்பட்ட 17-பி குறிப்பாணைகள் ஆகியவற்றை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, ஆசிரியர்கள்  உள்ளிட்ட அரசு ஊழியர்களை திறந்த மனதுடன் அழைத்துப் பேச வேண்டும். இரு தரப்பினரும் இயன்றவரை நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

 

சார்ந்த செய்திகள்